Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் ரெவரன்ட் பாதர் ஜோ அருண் தலைமையில் திருத்தியமைப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தை ரெவரன்ட் பாதர் ஜோ அருண் தலைமையில் திருத்தியமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். அறிக்கையில் கூறியுள்ளதாவது; தமிழ்நாட்டில் வாழும் மதம் மற்றும் மொழிவாரியான சிறுபான்மையினரின் நலன்களைப் பேணிக் காத்திடவும், அவர்களின் உரிமைகளைப் பாதுகாத்திடவும், 1989-ஆம் ஆண்டில், அன்றைய முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் அமைக்கப்பட்டது.

அதன்பின், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 2010 ஆம் ஆண்டில் பிறப்பித்த தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையச் சட்டம், 2010 (Act 21 of 2010)-இன்படி சிறுபான்மையினர் ஆணையம் சட்டப்பூர்வ அதிகாரம் பெற்ற ஆணையமாகச் செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த ஆணையத்தின் தலைவராக ரெவரன்ட் பாதர் ஜோ அருண் அவர்களையும், துணைத் தலைவராக திரு. எம்.எம். அப்துல் குத்தூஸ் எனும் திரு. இறையன்பன் குத்தூஸ் அவர்களையும், திருவாளர்கள். ஹெமில்டன் வெல்சன், ஏ.சொர்ணராஜ். நாகூர் ஏ.எச். நஜிமுதீன், பிரவீன் குமார் தாட்டியா, ராஜேந்திர பிரசாத், எம். ரமீத் கபூர், ஜெ. முகமது ரபி, எஸ். வசந்த் ஆகியோரை உறுப்பினர்களாக நியமித்து உத்தரவிட்டுள்ளார்கள்.

சிறுபான்மையினர் பொருளாதார கழகத் தலைவர் பெர்னாண்டஸ்

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் சிறுபான்மையினர் இனத்தைச் சேர்ந்த தனிநபர் மற்றும் குழுக்களுக்கு உதவிடும் வகையில் குறைந்த வட்டி விகிதத்தில் பொருளாதார நிலையை மேம்படுத்திக் கொள்ளும் பொருட்டு பல்வேறு கடனுதவித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மேலும் சிறப்பாகச் செயல்படும் நோக்கில் அதன் தலைவராக பெர்னாண்டஸ் ரத்தின ராஜா அவர்களை நியமனம் செய்து மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.