தமிழகத்தில் 4 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அதிநவீன மருந்தியல் பரிசோதனை ஆய்வகம்: அரசாணை வெளியீடு
சென்னை: சென்னை, கோவை, தஞ்சாவூர், மதுரை ஆகிய 4 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அதி நவீன மருந்தியல் பரிசோதனை ஆய்வகங்கள் அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆய்வகங்களில் மருந்தின் தன்மை மற்றும் அதன் வீரியம் குறித்து ஆய்வு செய்யும் பணிகளும், நோயாளிகளுக்கு எந்த அளவுக்கு அவை பலனளிக்கின்றது என்பது தொடர்பாக மதிப்பீடு செய்யும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
சான்றுப்படி நிரூபணமான மருந்துகளை பயன்படுத்துவது தொடர்பான பயிற்சி மற்றும் ஆலோசனைகள் மாணவர்களுக்கு வழங்கப்படும். சென்னை மருத்துவக் கல்லூரி, மதுரை மருத்துவக் கல்லூரி, தஞ்சை மருத்துவக் கல்லூரி மற்றும் கோவை மருத்துவக் கல்லூரிகளுடன் இணைந்த அரசு மருத்துவமனைகளில் இந்த பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளன. அதற்கான ஆய்வகம் அமைக்க மொத்தம் 14 வகையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் அதி நவீன கருவிகள் கொள்முதல் செய்யப்பட வேண்டியுள்ளது.
அதற்காக ரூ.1.60 கோடி செலவிடப்பட வேண்டும் என்றும் மொத்தம் ரூ.6.43 கோடி மதிப்பில் அந்த ஆய்வகங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் மருத்துவக் கல்வி இயக்குநர் பரிந்துரைத்திருந்தார். அந்த பரிந்துரையை கவனமாக பரிசீலித்த அரசு அதற்கான நிர்வாக ஒப்புதலை வழங்கியுள்ளது. இவ்வாறு அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.