தமிழ்நாட்டில் மாம்பழ விவசாயிகள் நலன் கருதி மாம்பழ ஏற்றுமதி மற்றும் உற்பத்தியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை: பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: 2025ம் ஆண்டின் மாம்பழ பருவத்தில் மா விவசாயிகள் மற்றும் மாம்பழம் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை தீர்க்க ஒன்றிய அரசின் தலையிட வேண்டும். கடந்த ஆண்டு நடந்தது போலவே இந்த பருவத்திலும் மா விவசாயிகளுக்கு நட்டம் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் தமிழ்நாடு அரசு தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருவதன் ஒரு முக்கிய பகுதியாக இந்த கடிதத்தை நான் எழுதுகிறேன்.
தனது முந்தைய கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்தபடி, இந்தியாவில் விற்கப்படும் மாம்பழ பானத்தில் உள்ள பழக்கூழின் அளவு, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் விதிமுறைகளை பின்பற்றாமல், பேக்கேஜ் செய்யப்பட்ட மாம்பழச் சாறு உற்பத்தி செய்யப்படுகிறது. பானங்களில் மாம்பழக்கூழ் சேர்க்கப்படுவதில் FSSAI தரநிலைகள் கண்டிப்பாக பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்கான வழிமுறைகளை பிறப்பிக்குமாறு இந்திய அரசை நான் கேட்டுக்கொண்டேன். மேலும் இதுகுறித்த தனது கடிதத்திற்கு இன்னும் நேர்மறையான பதில் ஏதும் கிடைக்கப்பெறவில்லை.
எனவே, மா விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டும், நம்நாட்டில் இந்த பானத்தை அதிகளவில் பயன்படுத்தும் நுகர்வோரின் நலனை கருத்தில் கொண்டும், மாம்பழங்களை அடிப்படையாக கொண்ட பான உற்பத்தி தொழிலில் குறைந்தபட்சம் 18 முதல் 20 சதவீதம் வரை பழக்கூழ் உள்ளடக்கத்தை உறுதிசெய்ய அறிவுறுத்தப்பட வேண்டும். அதனால் அப்பானத்தின் தரமும் மேம்படும்.
தமிழ்நாட்டின் மாம்பழ ஏற்றுமதி கொள்கையானது மாம்பழ வகை ஏற்றுமதியை மேம்படுத்துவதிலும், மாம்பழ பொருட்களை பல்வகைப்படுத்துவதிலும் கவனம் செலுத்துவதாகவும், அதற்கு தேவையான உள்கட்டமைப்பை உருவாக்குவதன் மூலமும், ஏற்றுமதி தரநிலைகளுக்கு இணங்க செயல்முறைகளை ஒழுங்குபடுத்துவதன் மூலமும் சாத்தியப்படும். அத்தகைய நடவடிக்கைகள் மாம்பழங்களுக்கு அதிக மதிப்பை சேர்க்கும் அதே வேளையில், மாம்பழக்கூழ் தொழில்களை அதிகமாக சார்ந்திருப்பதையும் குறைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.
ஆகவே, இந்த முயற்சிகளை மேலும் வலுப்படுத்திட இந்திய அரசின் வணிக அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், ஒருங்கிணைந்த பேக்கிங் செய்யும் வசதிகள், உள்நாட்டு கொள்கலன் கிடங்குகள், குளிரூட்டப்பட்ட துறைமுகங்கள், தரச்சோதனை ஆய்வகங்கள், வாங்குபவர்-விற்பனையாளர் சந்திப்புகளை ஏற்பாடு செய்தல், வெளிநாட்டு வாங்குபவர்களை அடையாளம் காணுதல் மற்றும் ஏற்றுமதி தரநிலைகள் குறித்த திறன் மேம்பாட்டு திட்டங்களை நடத்துதல் போன்ற உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதன் மூலம் தமிழ்நாட்டிற்கு தேவையான ஆதரவை வழங்க வேண்டும்.
இந்த பிரச்னையில் இந்திய பிரதமர் இத்தருணத்தில் தலையிட்டு, மா விவசாயிகளின் நலன்களை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், மேம்பட்ட ஏற்றுமதி மற்றும் மதிப்பு கூட்டல் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்ய உதவிட வேண்டும்.