தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்டங்களால்மான்செஸ்டர் சிட்டியில் ஐடி புரட்சி: ரூ.3,465 கோடி முதலீடுகளை ஈர்ப்பு, லட்சக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு
எல்காட் அமைப்பு சார்பில் கடந்த 2010ம் ஆண்டில் சிறப்பு பொருளாதார மண்டல திட்டத்தின்கீழ் பீளமேடு பகுதியில் 17 லட்சம் சதுரடி பரப்பளவில் டைடல் பார்க் அமைக்கப்பட்டது. இதனை அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி திறந்து வைத்தார். இதில், உலகின் பல பெரிய முன்னணி ஐ.டி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இதன் அருகே 2.60 லட்சம் சதுரடியில் ஐ.டி டவர் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இதேபோல், விளாங்குறிச்சி பகுதியில் சிறப்பு பொருளாதார மண்டல திட்டத்தின்கீழ் 61 ஏக்கரில் ரூ.217 கோடி மதிப்பீட்டில் கடந்த 2008ம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்பட்டது.
இங்கு, விப்ரோ, ஹெச்.சி.எல். உள்ளிட்ட பல்வேறு முன்னணி ஐடி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இதுமட்டுமின்றி, சரவணம்பட்டி, விளாங்குறிச்சி, காளப்பட்டி, பொள்ளாச்சி சாலை உள்ளிட்ட பகுதிகளில் தனியார் ஐ.டி பூங்காக்கள் இயங்கி வருகின்றன. இதில், நேரடியாக சுமார் 48 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களும், மறைமுகமாக 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கில், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த தொழில்களை பெருக்குவதில் தமிழ்நாடு அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் விளாங்குறிச்சி பகுதியில் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டல வளாகத்தில் ரூ.158.32 கோடி மதிப்பில் 2.86 ஏக்கர் பரப்பளவில் மேலும் ஒரு டைடல் பார்க் அமைக்கப்பட்டது. 2.94 லட்சம் சதுரடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இது, இரண்டு அடித்தளங்களில் வாகனங்கள் நிறுத்துமிடம், தரை மற்றும் 5 மேல்தளங்களில் தகவல் தொழில்நுட்ப தொழில்களுக்கான இட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
இதை, கடந்த நவம்பர் மாதம் கோவைக்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இக்கட்டிடத்தில் பல்வேறு முன்னணி தொழில் நிறுவனங்களுக்கு இட ஒதுக்கீடு ஆணைகளையும் வழங்கினார். இதில் பல்வேறு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இதனால் சுமார் 3,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும், கோவையில் 17.17 ஏக்கர் பரப்பளவில் மேலும் ஒரு தகவல் தொழில்நுட்ப பூங்கா 30 லட்சம் சதுரடி பரப்பளவில் அமைக்கப்படும் எனவும், இதன்மூலம் 36 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதேபோல், தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் ரூ.1,100 கோடி செலவில் 20 லட்சம் சதுரடியில் ஐ.டி. பார்க் அமைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்த தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதேபோல், பல்வேறு தனியார் ஐடி பூங்காக்கள் அமைக்கும் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு அரசு, செயல்படுத்தி வரும் திட்டங்கள் மற்றும் ஊக்குவிப்பு காரணமாக கோவையில் தகவல் தொழில்நுட்ப துறை அபரிமிதமான வளர்ச்சியை அடைந்து வருகிறது.
கோவையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவைகள் துறை ரூ.1,709 கோடி முதலீடுகளையும், மின்னணு துறை ரூ.1,756.39 கோடி முதலீடுகளையும் ஈர்த்துள்ளது. இது, கோவை டிஜிட்டல் மற்றும் மின்னணு புதுமை மையமாக உருவெடுத்து வருவதை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது. இது, பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுவதுடன், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளையும் வழங்கி வருகிறது.
இந்த திட்டங்கள் மூலம் சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களுக்கு இணையாக இனி கோவையும் மிளிர வாய்ப்பு உள்ளது. இனி, கோவை இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக வெளிமாநிலங்களுக்கு செல்ல தேவையில்லை. தற்போது, பெங்களூருவில் நிலவும் போக்குவரத்து நெரிசல் மற்றும் மழைக் காலங்களில் தேங்கும் தண்ணீரால் அங்குள்ள ஐடி நிறுவனங்கள் கோவைக்கு இடம் பெயர்ந்து வருகின்றன. ஐ.டி துறையின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில்கொண்டு கோவை மாநகரின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் தொழில்துறையினர் வலியுறுத்தி உள்ளனர்.
* தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவை மாநகரம் பல்வேறு தொழில் துறைகளில் சிறந்து விளங்கி வரும் நிலையில், தற்போது ஐ.டி எனப்படும் தகவல் தொழில்நுட்ப துறையிலும் வேகமாக முன்னேறி வருகிறது. சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் அதிக அளவிலான ஐ.டி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. குறிப்பாக, காக்னிசென்ட், ராபர்ட் பாஷ், டி.சி.எஸ், இன்போசிஸ், புரோட்டிவிட்டி உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் உள்பட 700க்கும் மேற்பட்ட ஐடி நிறுவனங்கள் கோவையில் கால் பதித்துள்ளன.
மேலும், ஆண்டுதோறும் ஐ.டி நிறுவனங்களின் வரத்து எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு அரசு அளித்து வரும் ஊக்கம் காரணமாக, பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தங்களின் அலுவலகங்களை கோவையில் அமைக்க ஆர்வம் காட்டி வருகின்றன. கோவை மாவட்டத்தில் இதுவரை அரசின் எல்காட் அமைப்பில் பதிவு செய்து 78 ஐ.டி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இதில், 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
* 2ம், 3ம் நிலை நகரங்களில் மினி டைடல் பூங்கா அமைக்கும் பணி தீவிரம்
தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சி கழகம் (டிட்கோ) மற்றும் தமிழ்நாடு மின்னணுவியல் கழகம் (எல்காட்) இணைந்து நிர்வகிக்கும் அமைப்பு என்பதால், இவ்விரு ஆங்கில பெயர்களை இணைத்து, சுருக்கமாக டைடல் பார்க் என அழைக்கப்படுகிறது.
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிக்கவும், புத்தொழில்களை ஆதரிக்கவும், வேலை வாய்ப்பை உருவாக்கவும் டைடல் நியோ லிமிடெட் என்ற சிறப்பு நோக்க நிறுவனத்தின் மூலம் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில், 50,000 சதுர அடி முதல் 1,00,000 சதுர அடி கட்டுமான பரப்பளவுடன் மினி டைடல் பூங்காக்களை அமைக்க அரசு முடிவெடுத்தது.
அதன்படி, விழுப்புரம், திருப்பூர், வேலூர், தூத்துக்குடி, தஞ்சாவூர் மற்றும் சேலத்தில் மினி டைடல் பூங்காக்கள் அமைப்பதற்கு முதல்வரால் அடிக்கல் நாட்டப்பட்டது. அவற்றில் கட்டுமானப் பணிகள் நிறைவுபெற்று விழுப்புரம், தஞ்சாவூர், சேலம், தூத்துக்குடியில் மினி டைடல் பூங்கா முதல்வரால் திறந்து வைக்கப்பட்டன. திருப்பூர், வேலூர் மற்றும் காரைக்குடி மினி டைடல் பூங்காக்களின் கட்டுமான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
இவை விரைவில் செயல்பட துவங்கும். மேலும், நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கான வடிவமைப்பு பணிகள் முடிவுற்று ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான பணிகள் தொடங்கப்படவுள்ளது. இந்த சூழலில், கடந்த 1ம் தேதி திருவண்ணாமலையில் ரூ.37 கோடி செலவில் 63,200 சதுர அடியில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
இதன் மூலம் 600 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இந்த மினி டைடல் பூங்காக்கள் மூலம் அப்பகுதிகளில் வசித்துவரும் பல்லாயிரக்கணக்கான படித்த இளைஞர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு அவர்கள் வசித்துவரும் மாவட்டங்களிலேயே தங்கி, தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில் வேலை பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படுவதுடன், அப்பகுதிகள் சமூக-பொருளாதார வளர்ச்சியடையவும், மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி மேம்படவும் வழிவகுக்கும்.
* கோவையில் முன்னணி நிறுவனங்கள் உள்பட 700க்கும் மேற்பட்ட ஐடி நிறுவனங்கள் கால் பதித்துள்ளன.
* தமிழ்நாடு அரசு அளித்து வரும் ஊக்கம் காரணமாக, பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தங்களின் அலுவலகங்களை கோவையில் அமைக்க ஆர்வம் காட்டி வருகின்றன.
* பெங்களூருவில் நிலவும் போக்குவரத்து நெரிசல் மற்றும் மழைக் காலங்களில் தேங்கும் தண்ணீரால் அங்குள்ள ஐடி நிறுவனங்கள் கோவைக்கு இடம் பெயர்ந்து வருகின்றன.
* கோவையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவைகள் துறை ரூ.1,709 கோடி முதலீடுகளையும், மின்னணு துறை ரூ.1,756.39 கோடி முதலீடுகளையும் ஈர்த்துள்ளது.