தமிழ்நாடு சட்டமன்றம் முன்பாக தியாகி சங்கரலிங்கனாருக்கு சிலை வைக்க கோரி வழக்கு: பரிசீலித்து நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
மதுரை: தமிழ்நாடு சட்டமன்றம் முன்பு தியாகி சங்கரலிங்கனாருக்கு சிலை வைக்க கோரிய வழக்கில் மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம். கடம்பூரைச் சேர்ந்த செல்வகுமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: நமது மாநிலத்திற்கு தமிழ்நாடு என்னும் பெயரை சூட்ட வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி, 79 நாட்கள் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டு தனது இன்னுயிரை கொடுத்தவர் தியாகி சங்கரலிங்கனார். அறவழியில் கடைசி வரை போராடிய பெருமை கொண்டவர். ஆனால், இதன்பின் பேரறிஞர் அண்ணா தலைமையில் திமுக அரசு பொறுப்பேற்றதும், நமது மாநிலத்திற்கு 18.11.1967ல் தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்டது.
சங்கரலிங்கனார் பிறந்த ஊரான விருதுநகரில் நினைவு மண்டபம் அமைந்துள்ளது. எனவே, தியாகி சங்கரலிங்கனாரின் தியாகத்தை போற்றும் வகையில், தமிழ்நாடு சட்டமன்றம் முன்பாக அவருக்கு சிலை வைக்குமாறும், சட்டமன்ற கட்டிடம் ஒன்றிற்கு அவரது பெயர் சூட்டுமாறும், விருதுநகரில் புதிதாக கட்டுப்பட்டுள்ள கலெக்டர் அலுவலகம், மருத்துவக்கல்லூரி உள்ளிட்டவற்றிற்கு அவரது பெயரை சூட்டுமாறும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் ஆகியோர் மனுதாரர் கோரிக்கை தொடர்பான மனுவை தமிழ்நாடு தலைமைச் செயலர் சம்பந்தப்பட்ட துறையினருக்கு ஒரு வாரத்தில் அனுப்பி வைத்து, அந்த மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தனர்.
