Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது: டங்ஸ்டன் சுரங்க அனுமதியை ரத்து செய்யக்கோரி தனித் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது

சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை இன்று கூடுகிறது. இதில் டங்ஸ்டன் சுரங்க அனுமதியை ரத்து செய்வது குறித்து தனித்தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. தமிழக சட்டசபையின் இந்தாண்டுக்கான (2024ம் ஆண்டு) முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 12ம் தேதி கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. பிப்ரவரி 15ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலுரை அளித்தார்.

அத்துடன் அவை நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றன. பிப்ரவரி 19ம் தேதி தமிழக அரசின் 2024-25-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். தொடர்ந்து 20ம் தேதி வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பொது பட்ஜெட், வேளாண்மை பட்ஜெட் மீது 22ம் தேதி வரை விவாதம் நடந்தது. இறுதியில் அமைச்சர்கள் பதில் அளித்து நிறைவேற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து துறைவாரியான மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடந்தது. மானியக்கோரிக்கை மீதான விவாதம் கடந்த ஜூன் 20 முதல் 29ம் தேதி வரை 10 நாட்கள் நடந்தது.

பேரவை விதிகளின்படி, சட்டசபை கூட்டம் முடிவுற்ற நாளில் இருந்து 6 மாதத்துக்குள் மீண்டும் கூடியாக வேண்டும். அந்த வகையில், வரும் டிசம்பர் இறுதிக்குள் சட்டப்பேரவை கூட்டம் நடத்தப்பட வேண்டும். இந்நிலையில், தமிழ்நாடு சட்டசபை கூட்டத் தொடர் டிசம்பர் 9, 10ம் தேதி என 2 நாட்கள் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்திருந்தார். அதன்படி தமிழக சட்டப்பேரவை தலைமை செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை கூடத்தில் இன்று காலை 9.30 மணிக்கு கூடுகிறது. கூட்டம் தொடங்கியதும் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், மேற்கு வங்காள முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா, முன்னாள் ராணுவ தலைமை தளபதி எஸ்.பத்மநாபன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஈ.சி.ஐ. திருச்சபையின் பேராயர் எஸ்றா சற்குணம், பிரபல தொழில் அதிபர் ரத்தன் டாடா, தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் பி.சங்கர், முரசொலி நாளிதழின் நிர்வாக ஆசிரியர் முரசொலி செல்வம் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்படுகிறது.

அதன் பின்னர், கேள்வி நேரம் தொடங்குகிறது.

எம்எல்ஏக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள். தொடர்ந்து, 2024-2025-ம் ஆண்டில் ஏற்பட்ட கூடுதல் செலவுக்காக துணை பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். பின்னர், அரசினர் தனித் தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட இருக்கிறது. அதன்படி மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்திடவும், சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியின்றி சுரங்க உரிம ஏலங்களை மேற்கொள்ளக்கூடாது என்றும் ஒன்றிய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது.

தொடர்ந்து நாளை கேள்வி நேரத்துடன் கூட்டம் தொடங்கும். கேள்வி நேரம் முடிந்ததும், 2024-2025-ம் ஆண்டு துணை பட்ஜெட் மீது விவாதம் நடைபெறுகிறது. விவாதத்தில் உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளிப்பார். தொடர்ந்து, கூடுதல் நிதி ஒதுக்குவதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட இருக்கிறது. அத்துடன் இந்த ஆண்டுக்கான சட்டசபை கூட்டம் நிறைவடைகிறது.

அடுத்து, புத்தாண்டில் (2025) ஜனவரி மாதம் கவர்னர் உரையுடன் சட்டசபை கூடும். இன்று நடைபெறும் கூட்டத்தில் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்னைகளை கிளப்ப முடிவு செய்துள்ளது. பிரச்னை தொடர்பாக புயலை கிளப்பினால் அதற்கான பதிலடியை ஆளுங்கட்சியினர் உடனுக்குடன் அளிப்பார்கள் என்று தெரிகிறது. இதனால் 2 நாட்கள் நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தில் பரபரப்புக்கு பட்சமிருக்காது.

* மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்திட வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது.

* 2024-2025-ம் ஆண்டு துணை பட்ஜெட் மீது விவாதம் நடைபெறுகிறது. விவாதத்தில் உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளிப்பார்.