Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்: 28 மாவட்ட ஊரக உள்ளாட்சிகளுக்கு தனி அதிகாரிகள் நியமனம்

* கனிமங்களை கொண்டுள்ள நிலத்துக்கு வரி விதிக்க அனுமதி

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி, 28 மாவட்ட ஊரக உள்ளாட்சிகளுக்கு தனி அதிகாரிகள் நியமனம், கனிமங்களை கொண்டுள்ள நிலத்துக்கு வரி விதிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டுவருவதாகவும், தமிழகத்தின் 3 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களின் நியமன விவகாரத்தில் ஆளுநர் தலையீடு அதிகரிப்பதாகவும் கூறி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்குகளை நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

கடந்த மாதம் நடைபெற்ற விசாரணையில், மசோதாக்களை நிறுத்தி வைத்திருப்பது ஏன்? என ஆளுநர் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். விசாரணையில் ஆளுநர் தரப்பு பல்வேறு வாதங்களை முன்வைத்தது. ‘ஆளுநர் சில முரணான காரணங்களுக்காக ஒப்புதல் வழங்காமல் இருப்பார் என்றால், அரசு மற்றும் ஆளுநர் என இரு தரப்பும் இணைந்து முடிவெடுக்க குடியரசு தலைவருக்கு அனுப்பலாம். குறிப்பாக, இதன் மீது முடிவெடுக்க குடியரசு தலைவருக்கு அனுப்புங்கள் என்று மாநில அரசே ஆளுநரை கேட்கலாம். எனவே, இதில் எதுவும் மாநில உரிமையை பறிப்பதாக கருத முடியாது’ என்று ஆளுநர் தரப்பு கூறியது.

“பல்கலைக்கழக மசோதா மத்திய சட்டத்துக்கு எதிராக இருந்தால் அடுத்த நடவடிக்கை என்ன? மாநில அரசு எப்படி செயல்படும் என்று நினைக்கிறீர்கள்? ஆளுநர் அரசுக்கு முட்டுக்கட்டையாக உள்ளார். மசோதா விவகாரத்தில் ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்க முடியாது” என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தற்போது ஒப்புதல் அளித்துள்ளார்.

அதன்படி, ஊரக உள்ளாட்சிகளுக்கு தனி அதிகாரிகள் நியமனம், கனிமங்களை கொண்டுள்ள நிலத்துக்கு வரி சட்ட மசோதாவுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில், 28 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற்றது. அப்போது தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த ஜனவரி 5ம் தேதியுடன் முடிவுக்கு வந்தது.

இதையடுத்து, 28 மாவட்ட ஊரக உள்ளாட்சிகளுக்கு தனி அலுவலர் நியமிப்பது தொடர்பாக, ஊராட்சிகள் சட்டத்திருத்த மசோதாவை சட்டப்பேரவையில் கடந்த ஜனவரி 11ம் தேதி அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்தார். இந்த மசோதா ஒப்புதலுக்காக தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது, இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். அதேபோன்று, தமிழ்நாடு கனிமங்களை கொண்டுள்ள நில வரிச் சட்டம் என்ற சட்டத்தை இயற்றுவதற்கான சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கடந்த டிசம்பர் 10ம் தேதி அறிமுகம் செய்தார்.

அதில், மாநிலத்தின் வருவாயை அதிகரிப்பதற்காக கனிம வளம் கொண்ட நிலங்கள் மீது வரி விதிப்பதற்கான சட்டத்தை இயற்ற அரசு முடிவு செய்துள்ளது. இந்த சட்டப்படி பழுப்பு கரி, சுண்ணாம்புக்கல், காரீயம் உள்ளிட்ட 13 வகை கனிமங்களை பெரிய வகை கனிமங்கள் என்றும் கரட்டுக்கல், சரளை மண், வண்ண மற்றும் கருப்பு கருங்கல், கூழாங்கல், மணல், படிகக் கல், உருட்டு களி மண், களிமண், ஆற்று மணல், நொறுங்கிய கல், சுண்ணப்பாறை உள்ளிட்ட 17 வகை கனிமங்கள் சிறிய வகை கனிமங்கள் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.  பெரிய கனிமங்களுக்கு ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.40 முதல் ரூ.7 ஆயிரம் வரை வரி நிர்ணயிக்கப்படுகிறது.

சிறு கனிமங்களுக்கு ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.40 முதல் ரூ.420 வரை வரி நிர்ணயிக்கப்படுகிறது. நிலத்தில் உள்ள கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு ஆகியவற்றுக்கு முறையே ஒரு டன்னுக்கு ரூ.8,500 மற்றும் ஒரு கன மீட்டருக்கு ரூ.3.50 என வரி நிர்ணயம் செய்யப்படுவதாக மசோதாவில் கூறப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இந்த இரண்டு மசோதாக்களுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கிய நிலையில், தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அரசிதழில் நேற்று வெளியிட்டுள்ளது.