தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருப்பதால்தான் எடப்பாடி பழனிசாமியால் சுற்றுப்பயணம் செல்ல முடிகிறது: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பதிலடி
சென்னை: சென்னை வால்டாக்ஸ் சாலையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் நடைபெற்று வரும் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 700 குடியிருப்புகள் 400 சதுரடியில் அமைக்கப்பட உள்ளது. விளையாட்டு மைதானம், திருமண மண்டபம், டயாலிசிஸ் சென்டர், மாற்றுத்திறனாளிகள் சிகிச்சை மையம் உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளன. கூடுதலாக இடம் உள்ளதால் முதல்வரின் உத்தரவை பெற்று கூடுதலாக 140 குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் உள்ள வீடுகளை போல் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் கட்டப்பட உள்ளது. மொத்தம் 840 குடியிருப்புகள் அமைய உள்ளன.
இந்த இடத்தில் 7 பணிகள் நடக்கிறது டிசம்பர் மாதத்திற்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவர பணிகள் முன்னேற்றம் கண்காணிக்கப்படுகிறது. தினமும் விமர்சனம் செய்வதை எடப்பாடி பழனிசாமி ஒரு தொழிலாக எடுத்துக் கொண்டிருக்கிறார். சட்டம்-ஒழுங்கு சரியாக இல்லை என்றால் அவர் எப்படி மாநிலம் முழுவதும் பிரசார பயணத்தை மேற்கொள்ள முடியும். பிரசார பயணத்தில் போதிய பாதுகாப்பு அளிப்பதால் தான் எந்த பிரச்னையும் இல்லாமல் வாயில் வந்ததை எல்லாம் கொட்டிக் கொண்டு சட்டம்- ஒழுங்கு சரியாக இருப்பதால் தானே அவர் அனுமதிக்கப்படுகிறார். சட்டம்- ஒழுங்கு சரியில்லை என்றும் பல்வேறு குற்றச்சாட்டுகளும் ஆதாரமற்றவை. ஆதாரம் இருந்தால் நீதிமன்றத்திற்கு செல்லட்டும். அதை சந்திக்க திமுக தயாராக இருக்கிறது.
இவரைப் போல் மேல்முறையீடு என்று உச்ச நீதிமன்றம் செல்கின்ற இயக்கமல்ல. எந்த வழக்காக இருந்தாலும் நீதிமன்ற நெடிய படிக்கட்டுகளை சந்திக்க திமுக தயாராக இருக்கிறது. இவரை போல் சாத்தான்குளத்தின் சைத்தான் ஆட்சி அல்ல, இந்த ஆட்சி.இவ்வாறு அவர் பேசினார். இந்த ஆய்வின்போது சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் செயலாளர் பிரகாஷ், சென்னை மாநகராட்சி வடக்கு வட்டார துணை ஆணையர் கட்டா ரவி தேஜா, தலைமை திட்ட அதிகாரி ருத்தரமூர்த்தி, மற்றும் திமுகவினர், மாநகராட்சி, குடிநீர் வாரியம், மின்வாரிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.