சென்னை: பயணிகளின் வசதிக்காக தமிழ்நாடு, கேரளா மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களில் இயக்கப்படும் பல ரயில் சேவைகளுக்கு கூடுதல் நிறுத்தங்கள் வழங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ரயில்வே வாரியத்தின் ஒப்புதலைத் தொடர்ந்து, இந்த புதிய நிறுத்தங்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி,தமிழகத்தில் மொத்தம் 21 ரயில்களில் 38 புதிய நிறுத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
முக்கியமாக, ஆம்பூர், குடியாத்தம், வாணியம்பாடி, வாலாத்தூர், மேல்பாட்டி, வாலாஜா சாலை, இருகூர், சிங்காநல்லூர், கொடைக்கானல் ரோடு, பாபநாசம், திருச்சி கோட்டை, வள்ளியூர், மற்றும் நாங்குநேரி போன்ற முக்கிய ஊர்களில் இனி ரயில்கள் நின்று செல்லும். ஹவுரா - கன்னியாகுமரி, திருப்பதி - ராமேஸ்வரம், மதுரை - புனலூர், மயிலாடுதுறை - செங்கோட்டை, ஈரோடு - செங்கோட்டை, மற்றும் மைசூரு - கடலூர் போன்ற முக்கிய வழித்தடங்களில் இயங்கும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இந்த புதிய நிறுத்தங்களால் பயனடையும்.
சென்னை சென்ட்ரல் - ஷிமோகா டவுன் எக்ஸ்பிரஸ் (12691), ஆகஸ்ட் 22, முதல் ஆம்பூரில் அதிகாலை 02:03 மணிக்கு நின்று செல்லும்.தன்பாத் - ஆலப்புழா எக்ஸ்பிரஸ் (13351), ஆகஸ்ட் 18 முதல் குடியாத்தம் மற்றும் வாணியம்பாடியில் நின்று செல்லும். ஹவுரா - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் (12665), ஆகஸ்ட் 18முதல் கொடைக்கானல் ரோட்டில் அதிகாலை 03:58 மணிக்கு நின்று செல்லும். பெரும்பாலான புதிய நிறுத்தங்கள் ஆகஸ்ட் 18 முதல் அமலுக்கு வருகின்றன. சில நிறுத்தங்கள் மட்டும் ஆகஸ்ட் 19, 21, 22, 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் இருந்து செயல்பாட்டுக்கு வரும்.
அதே போல்,கேரளாவில் 11 ரயில்களில் மொத்தம் 20 புதிய நிறுத்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒட்டப்பாலம், பையனூர், கன்ஹங்காட், திருவல்லா, ஹரிப்பாடு போன்ற இடங்களில் இந்த புதிய நிறுத்தங்கள் அமைகின்றன.ஆந்திரப் பிரதேசத்தில், சார்லபல்லி - சென்னை சென்ட்ரல் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (12604) ரயில், ஆகஸ்ட் 18 முதல் நாரயுடுபேட்டாவில் நின்று செல்லும். இது புறநகர் பகுதி பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.