Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தமிழக கபடி மீண்டும் சிகரம் தொட வேண்டும்: கண்கள் விரிய கனவை விவரிக்கும் ஜெயசூர்யா

சென்னை: புரோ கபடி லீக்கில் தற்போது சிறப்பாக திகழும் இளம் வீரர் என்.எஸ். ஜெயசூர்யா நாகராஜன், தமிழ்நாட்டின் கன்னியாகுமரியைச் சேர்ந்தவர். சிறுவயதில் தந்தையின் பாதையில் தொடங்கிய இவரின் பயணம் இன்று இந்திய கபடி உலகில் வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளது. ஜெயசூர்யா, தற்போது ஹரியானா ஸ்டீலர்ஸ் கபடி அணியில் டிபெண்டர் ஆக இடம்பெற்றுள்ளார். “தமிழகம் மீண்டும் கபடியில் ஆதிக்கம் செலுத்த வேண்டும்” என்ற கனவுடன் அவர் தொடர்ந்து பாடுபட்டு வருகிறார்.

ஜெயசூர்யாவுடன் கலந்துரையாடியபோது, அவர் மனம் விட்டுக்கூறியவை: கபடியில் ஈடுபட வேண்டுமென்ற எண்ணம் எப்படித் தோன்றியது?

ஜெயசூர்யா: என் தந்தை நாகராஜனும் ஒரு கபடி வீரர். அவரை பார்த்து சிறுவயதிலிருந்தே எனக்கும் விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டது. பள்ளி நாட்களிலேயே மாவட்ட அளவில் போட்டிகளில் கலந்துகொண்டேன். ஆரம்பத்தில் 100 மீட்டர் ஓட்டத்தில் தேசிய அளவில் பயிற்சியும் எடுத்தேன். ஆனால் மனம் முழுவதும் கபடிக்கே சென்றது. தினமும் காலை 6 மணிக்கு கிளப்பில் பயிற்சியாளரைச் சந்தித்து பயிற்சி பெற்றேன். வெறும் ஆறு மாதங்களிலேயே தேசிய அணியில் இடம் பெற்றேன். அப்போது என் வயது 15 அல்லது 16 மட்டுமே.

* உங்கள் சொந்த ஊர், கல்வி மற்றும் ஆரம்ப காலம் பற்றி சொல்லுங்கள்.

ஜெயசூர்யா: நான் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குலசேகரம் என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்தவன். பள்ளிப் படிப்பை முடித்தேன். சிறுவயதிலிருந்தே விளையாட்டு தான் என் வாழ்க்கை. வீட்டிலிருந்தே ஆரம்பித்து, இன்று ப்ரோ கபடி மேடையில் நிற்பது வரை இந்தப் பயணம் எளிதாக இருந்ததில்லை.

1990களுக்குப் பிறகு தமிழகத்தின் கபடி நிலை குறைந்துவிட்டது. அதற்கான காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்?

ஜெயசூர்யா: 1995 வரை தமிழகமே கபடியில் ஆதிக்கம் செலுத்தியது. தேசிய பதக்கங்கள், அர்ஜுனா விருதுகள் அனைத்தும் தமிழக வீரர்களே வென்றனர். ஆனால் பின்னர் கிரிக்கெட்டின் பிரபலமும், வேலை வாய்ப்புகள் குறைவாக இருப்பதன் காரணமாக கபடியின் வளர்ச்சி தடைப்பட்டது. நான் கூட நான்கு ஆண்டுகளாக சுங்கத் துறையில் வேலைக்காக காத்திருக்கிறேன். ஆனால் புரோ கபடி லீக் வந்தபிறகு கபடி மீண்டும் வளர்ச்சி பாதையில் செல்கிறது.

உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட சவால்களைப் பற்றி சொல்ல முடியுமா?

ஜெயசூர்யா: தமிழ் தலைவாஸ் அணியுடன் ஒப்பந்தம் செய்திருந்தேன். ஆனால் காயம் காரணமாக அதை ரத்து செய்ய வேண்டியதாகிவிட்டது. காயங்களிலிருந்து எட்டு மாதங்கள் கழித்து மீண்டும் களத்திற்குத் திரும்பினேன். கடந்த சீசனில் 67 போட்டிகளில் மட்டுமே விளையாட முடிந்தது. ஆனாலும் அந்த அனுபவங்கள் எனக்கு பெரிய பாடமாக அமைந்தது. இப்போது முழு ஆற்றலுடன் மீண்டும் போராட்டத்தில் இருக்கிறேன்.

இதுவரை உங்கள் புரோ கபடி புள்ளிவிவரங்கள் எப்படி இருக்கின்றன?

ஜெயசூர்யா: மொத்தம் 6 போட்டிகளில் விளையாடியுள்ளேன். 23 ரெய்ட் முயற்சிகளில் 7 வெற்றி பெற்றுள்ளேன். மொத்த புள்ளிகள் 11. ரெய்ட் ஸ்ட்ரைக் ரேட் சுமார் 48%. இவை எனது தொடக்க சாதனைகள். இன்னும் சிறப்பாக விளையாடி என் எண்ணிக்கையை உயர்த்துவதே என் நோக்கம்.

வேலை வாய்ப்புகள் குறைவாக இருப்பது இளம் வீரர்களை பாதிக்கிறதா?

ஜெயசூர்யா: கண்டிப்பாக. தமிழகத்தில் 3% ஒதுக்கீடு இருக்கிறது. ஆனால் தேசிய அளவில் சாதனை செய்தால்தான் வேலை வாய்ப்பு கிடைக்கும். கடந்த 20 ஆண்டுகளில் மாநில வீரர்கள் முக்கிய இடங்களில் வரவில்லை. திறமை இருந்தும் வாய்ப்பு இல்லாததே இளம் வீரர்களை மனம் தளரச் செய்கிறது.

எதிர்கால இலக்கு என்ன?

ஜெயசூர்யா: என் கனவு, தமிழக கபடியை மீண்டும் உச்சிக்குக் கொண்டு செல்வதே. நம்மிடம் திறமையான வீரர்கள் ஏராளமாக உள்ளனர். அவர்கள் சரியான பயிற்சி மற்றும் வாய்ப்பைப் பெற்றால், இந்திய கபடி உலகில் நாமே மீண்டும் தலைசிறந்தவர்களாக மாறுவோம். நான் என் வாழ்க்கையையே அதற்காக அர்ப்பணித்துள்ளேன்.

இறுதியாக வாசகர்களுக்கு சொல்ல விரும்புவது?

ஜெயசூர்யா: இளம் தலைமுறை கபடியில் பயிற்சி பெறுவதற்கு சிறந்த நேரம் இதுதான். இந்த விளையாட்டு நம் மண்ணிலிருந்து பிறந்தது. அதை உலக மேடையில் உயர்த்துவது நம்முடைய பொறுப்பு. நான் என்னால் இயன்றதைச் செய்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.