Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு முதல் ரூ.10 லட்சம் காப்பீடு வரை: தமிழக அரசின் 6 அறிவிப்புகள்

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (வியாழக்கிழமை) காலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தூய்மைப் பணியாளர்கள் நலனுக்காக 6 சிறப்புத் திட்டங்களை நிறைவேற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தூய்மைப் பணியாளர்கள் நலன் காக்கும் வகையில் 6 சிறப்பு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு திட்டங்கள் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் பேசுகையில், "தூய்மை பணியாளர்கள் மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி கரிசனத்துடன் இருக்கிறார். தூய்மை பணியாளர்களின் நலனை காப்பதில் அரசு உறுதியாக உள்ளது.தூய்மை பணியாளர்களின் நலவாரியம் சிறப்பாக செயல்படுவதை அரசு உறுதி செய்துள்ளது.

காலை உணவு

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு காலை உணவு அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளால் இலவசமாக வழங்கப்படும். இத்திட்டம், முதற்கட்டமாக பெருநகர சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்படும். அதன்பின்னர் மற்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

குடியிருப்புகள்

நகர்ப்புறங்களில் சொந்த வீடு இல்லாத தூய்மைப் பணியாளர்களுக்கு 3 ஆண்டுகளில் தூய்மைப் பணியாளர் நல வாரிய உதவியுடன் 30,000 புதிய குடியிருப்புகள் கட்டித் தரப்படும். கிராமப்புறங்களில் வசிக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கு 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின்கீழ் வீடு ஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்கப்படும்.

நலன் காக்கும் காப்பீடு

தூய்மைப் பணியாளர்களின் உடல நலன் காக்க, தற்போதுள்ள அரசின் 5 லட்ச ரூபாய் மருத்துவக் காப்பீட்டுடன், மிகை தொகையாக மேலும் ரூ.5 லட்சத்திற்கான புதிய திட்டம்.

சுயதொழில் உதவி

தூய்மைப் பணியாளர் நலவாரிய உறுப்பினர்களின் குடும்பத்தினர் சுயதொழில் தொடங்க ரூ.3 லட்சம் வரை மானியம், 6% வட்டி மானியம்.

உயர்கல்வி உதவித் தொகை

தூய்மைப் பணியாளர் வீட்டு மாணவர்களின் கல்வி நலன் கருதி, 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்படும்.

நிவாரண நிதி

தூய்மைப் பணியாளர்கள் குடும்பங்களின் எதிர்கால நலனையும், வாழ்வாதாரத்தையும் கருத்தில்கொண்டு பணியின்போது மரணம் அடையும் தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. " இவ்வாறு தெரிவித்துள்ளார்.