முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தில் மனநல சிகிச்சை : ரூ.51 லட்சம் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை!!
சென்னை : முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மனநல காப்பகங்களில் இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.51 லட்சம் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 51 நோய்களுக்கு ரூ.5 லட்சம் வரையிலான உயர் மருத்துவ சிகிச்சைகளை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக பெறலாம். இந்த நிலையில் மனநல காப்பகங்களில் சிகிச்சையில் இருப்பவர்களுக்கு முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்ப அட்டை மற்றும் வருமானச் சான்றிதழ் இன்றி மனநலம் பாதிக்கப்பட்டவர்களை காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்குமாறு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 108 மன நல காப்பகங்களில் உள்ள 5,944 பேரை காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இணைத்து சிகிச்சை அளிக்க அனுமதி அளிக்கப்பட்டு, இதற்காக ரூ.51 லட்சம் ஒதுக்கீடு செய்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசாணையை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 54 அரசு மன நலக் காப்பகங்களும், 54 தன்னாா்வ அமைப்பு மன நலக் காப்பகங்களும் செயல்படுகின்றன. அங்கு உள்ள காப்பகவாசிகளில் பெரும்பாலானோருக்கு அடையாள ஆவணங்களுடன், ஆதாா் அட்டைகளோ இல்லை. எனவே, முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் எந்த ஆவணங்களும் இன்றி அவா்களைச் சோ்க்க வேண்டும் என்று தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநா் பரிந்துரைத்தாா். இதைக் கவனமாக பரிசீலித்த அரசு அதற்கு அனுமதி அளித்துள்ளது.