Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விஷச்சாராய உயிரிழப்புகள் 37 ஆக அதிகரிப்பு.. இது தீவிர கவலைக்குரிய விஷயமாகும் என தமிழ்நாடு ஆளுநர் ரவி இரங்கல்!!

கள்ளக்குறிச்சி : விஷச்சாராய உயிரிழப்புகள் கவலை தருகிறது என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் 100-க்கும் மேற்பட்டோர் விஷச்சாராயம் குடித்தனர். அவர்களில் பல பேருக்கு வாந்தி, மயக்கம், தலைவலி மற்றும் வயிறு எரிச்சலால் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவமனை, சேலம் அரசு மருத்துவமனை மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, உள்ளிட்ட இடங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் சிகிச்சை பலனின்றி 36 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மருத்துவமனைகளில் 91 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த கோர சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக இரங்கல் தெரிவித்துள்ள ஆளுநர் ரவி, "கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து பல உயிர்கள் பலியானதாக கூறப்படுவதை அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். மேலும் பலர் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது நெஞ்சார்ந்த இரங்கலையும், மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளவர்கள் விரைவில் குணமடையவும் வேண்டிக் கொள்கிறேன். நமது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அவ்வப்போது, விஷச்சாராயம் குடிப்பதால் உயிரிழப்புகள் ஏற்படுவதாக செய்திகள் வெளிவருகின்றன. அவை சட்டவிரோத மதுபான தயாரிப்பு மற்றும் நுகர்வு ஆகியவற்றைத் தடுப்பதில் தொடரும் குறைபாடுகளை பிரதிபலிக்கின்றன. இது தீவிர கவலைக்குரிய விஷயமாகும்,"இவ்வாறு தெரிவித்தார்.