Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஒருமனதாக ஆதரவு அளிக்க வேண்டும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பாஜக வேண்டுகோள்!

சென்னை : குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக மகாராஷ்டிர ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு ஆதரவளிக்குமாறு தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை:

"துணை குடியரசு தலைவர் பதவிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழக மண்ணின் மைந்தர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துக்கள். அவரை, துணை குடியரசுதலைவருக்கான வேட்பாளராக அறிவித்ததன் மூலம் பாஜக தமிழ்நாட்டு மக்களுக்கு மற்றுமொரு மணிமகுடம் சூட்டியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, தேசிய தலைவர் நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு, தமிழ் நாட்டு மக்களின் மீது கொண்டுள்ள பேரன்பிற்கு இது மற்றுமொரு சாட்சியாகும்.

தனது வாழ்வின் ஆரம்பக் கட்டத்திலிருந்தே மக்களின் நலனையும் தேசியவாதத்தையும் முன்னிலைப்படுத்தி, அயராது உழைத்தவர். தென்னை நார் வாரியத்தின் தலைவராக, இந்தியாவின் தும்பு தொழில்துறையை உலக அளவில் உயர்த்தி சாதனை புரிந்தவர். இருமுறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். தமிழக பாஜ தலைவர், தேசிய செயற்குழு உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாகப் பணியாற்றியவர்.1998ம் ஆண்டில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு தாக்குதலால் ஸ்தம்பித்து நின்ற கோவை மாநகரை மீண்டும் உயிர்ப்பிக்க அவர் ஆற்றிய சீரிய பணி வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்கும். அரசியல் பணிகளைத் தாண்டி, அவரின் எளிமை, ஒழுக்கம், பொதுமக்களோடு கொண்டிருக்கும் ஆழ்ந்த பிணைப்பு ஆகிய சிறந்த குணங்கள் தான் அவரைத் தலைசிறந்த மக்கள் தலைவராக உயர்த்தின. இத்தகைய குணசீலர் இன்று துணைக் குடியரசு தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பது, பாஜக எப்பொழுதும் உழைப்பையும் அர்ப்பணிப்பையும் கவுரவிக்கும் கட்சி என்பதை வெளிப்படுத்தும் உயிரோவியம்.

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமுக்கு பின், மீண்டும் தமிழர் ஒருவர் குடியரசுப் பதவிக்கு முன்மொழியப்பட்டுள்ளது தமிழர்களின் திறமைக்கு பாஜக அளிக்கும் மதிப்பை உணர்த்துகிறது. தமிழர் ஒருவர் தேசத்தை வழிநடத்தும் உயரிய பொறுப்பில் இருப்பது நம் ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் பெருமைக்குரிய விஷயமாகும். எனவே, வரவிருக்கும் துணை குடியரசு தலைவர் தேர்தலில், வேறுபாடுகளைக் களைந்து தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஒருமனதாக ஆதரவு அளிக்க கேட்டுக்கொள்கிறேன். அவர் வெற்றி பெற, தாமரை சொந்தங்கள் அனைவரும் நாளை அருகில் உள்ள ஆலயங்களுக்குச் சென்று சிறப்பு பிரார்த்தனை செய்ய கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.