தமிழக அரசு மருத்துவமனைகளில் மருத்துவர் பணியிட எண்ணிக்கை தெரியாமல் பேசுவதா? அன்புமணிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி
சென்னை: தமிழகத்தில் மழைக்கால நோய் பாதிப்பு என்பது பதற்றமான சூழல் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை, தலைமைச் செயலகத்தில் புற்றுநோய் தடுப்பு மற்றும் பராமரிப்பு திட்டத்தின்கீழ் மகளிர் நல்வாழ்விற்காக ரூ.40 கோடி செலவில் நடமாடும் மருத்துவ ஊர்திகள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 196 உதவியாளர், 18 வட்டார சுகாதார புள்ளியியலாளர், மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 19 திறன்மிகு உதவியாளர்-II பணியிடங்களுக்கு பணிநியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில் நடந்தது. அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு வரலாற்றில் மட்டுமல்ல, இந்திய வரலாற்றில் புதிய பணி ஆணைகள் வழங்கப்படும் நிலையில் அவர்களுக்கு கலந்தாய்வு நடத்தி அவரவர் விரும்பும் இடங்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் இன்று 233 பேருக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.
அன்புமணி தமிழ்நாட்டில் எத்தனை மருத்துவர் பணியிடங்கள் இருக்கிறது என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும். தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த அரசு மருத்துவர் பணியிடங்கள் எண்ணிக்கை 20,000 தான். இதில் 12,000 இடங்கள் காலி என்று சொல்கிறார். இந்த அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு மருத்துவமனைகளுக்கு வருகிற மக்களின் பயன்பாடு என்பது மூன்று மடங்கு அதிகரித்திருக்கிறது. நான் அன்புமணியை கேட்டுக் கொள்வது நான்கரை வருட இந்த ஆட்சியில் 35,000 புதிய பணியிடங்களுக்கான பணி ஆணைகள் தரப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மழைக்கால நோய் பாதிப்புகளுக்கான மருந்துகள் அதற்கான மருத்துவ உபகரணங்கள், மருத்துவர்கள் தயார் நிலையில் இருக்கிறார்கள். மலேரியா, சிக்கன்குனியா போன்ற மழைநோய் பாதிப்புகளுக்கு ஏற்ற வார்டுகள் பணிகள் முடிவடைந்திருக்கிறது. சென்னையில் மட்டும் 2,100 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது.
