சென்னை: தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறோம் என்று தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்தது. சென்னை மாநகராட்சியின், 5 மற்றும் 6வது மண்டலங்களில் தூய்மைப் பணிகளை 276 கோடி ரூபாய்க்கு தனியார் நிறுவனத்துக்கு வழங்கி கடந்த ஜூன் 16ம் தேதி மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் பில்டிங் அருகில் தூய்மைப் பணியாளர்கள் 10 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்க வகை செய்யும் தீர்மானத்துக்கு தடை விதிக்கக் கோரி உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் அதன் தலைவர் கு.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில், இரு மண்டலங்களிலும் பணியாற்றும் 2042 நிரந்தர பணியாளர்கள் வேறு மண்டலங்களுக்கு மாற்றப்படுவார்கள். 1953 தற்காலிக பணியாளர்கள் ஒப்பந்த நிறுவன விதிகளின்படி பணியமர்த்தப்படுவார்கள் என்று கூறினாலும், அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளது. இந்த பிரச்சனை தொடர்பாக தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. தொழிலாளர் நீதிமன்ற அனுமதியின்றி, தூய்மைப் பணிகள் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதனால் மாநகராட்சியின் தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி சுரேந்தர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மாநகராட்சி சார்பில் பதிலளிக்க அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது."தூய்மை பணியாளர்களுக்கு எதிராக அரசு செயல்படுவது போன்ற போலி பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறோம்,"என்று அரசு தரப்பு விளக்கம் அளித்தது. தூய்மை பணியாளர்களின் போராட்டம் காரணமாக பொதுமக்களுக்கு இடையூறு என தலைமை நீதிபதி முன் வழக்கறிஞர் வினோத் மீண்டும் முறையிட்டார். தினந்தோறும் முறையீடு செய்ய வேண்டாம் என வழக்கறிஞர் தரப்புக்கு அறிவுறுத்திய தலைமை நீதிபதி, மனுவில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து தாக்கல் செய்த பின்பு மனு விசாரிக்கப்படும் என்று தெரிவித்தார்.