சென்னை : தமிழக அரசு பேருந்துகளில் காவலர்கள் கட்டணமின்றி பயணிக்க அனுமதி இல்லை என்று போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. நெல்லை நாங்குநேரி அருகே, டிக்கெட் எடுக்க மறுத்து காவலர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், போக்குவரத்து துறை இவ்வாறு விளக்கம் அளித்துள்ளது. நாகர்கோவில் செட்டிக்குளம் பணிமனையில் இருந்து திருநெல்வேலி வழியாக தூத்துக்குடிக்கு சென்ற காவலர் ஆறுமுகப்பாண்டி, காவலர் சீருடையில் இருப்பதால் பயணச் சீட்டு எடுக்க முடியாது என்று கூறி போக்குவரத்துத் துறை ஊழியர்களான ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்நிலையில் மேற்கூறிய சம்பவம் தொடர்பாக போக்குவரத்து துறை விளக்கம் அளித்துள்ளது. அதில்,
* அரசுப்பேருந்துகளில் காவலர்கள் கட்டணமின்றி பயணிக்க அனுமதி இல்லை.
* வாரண்ட் இருந்தால் மட்டுமே காவல் துறையினர் பேருந்தில் கட்டணமின்றி பயணிக்க முடியும்.
* மற்ற அனைத்து நேரத்திலும் காவலர்கள் பேருந்துகளில் பயணிக்கும் பொழுது கட்டாயம் டிக்கெட் எடுக்க வேண்டும்.
* நாங்குநேரியில் பேருந்து நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காவலர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.