Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழ்நாட்டில் முதல் முறையாக குமரியில் அறிமுகம் போலீசார் வார விடுமுறை எடுக்க புதிய செயலி: மாதத்துக்கு 4 நாட்கள் லீவு கட்டாயம்

நாகர்கோவில்: தமிழ்நாட்டில் போலீசாரின் பணிச்சுமை மற்றும் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் வாரவிடுமுறை கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஆனாலும் பல்வேறு காவல் நிலையங்களில் வார விடுமுறை சரியாக வழங்கப்படவில்லை என்று புகார்கள் உள்ளன. குமரி மாவட்டத்திலும், எஸ்.பி. ஸ்டாலின் நடத்தி வரும் மனம் திறந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற போலீசார் அதிகம் பேர், வாரவிடுமுறை முறையாக இல்லை என தெரிவித்தனர்.

இதையடுத்து மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும், போலீசாருக்கு வாரவிடுமுறை முறையாக அளிக்கப்பட வேண்டும் என எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவிட்டு இருந்தார். இதை கண்காணிக்கும் வகையில், தமிழகத்திலேயே முதல் முறையாக போலீசாரின் ரெஸ்ட் வெப் போர்ட்டல் பார் வீக்கிளி ஆப் (REST web Portal Weekly Off) என்ற புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. வார விடுமுறைக்கான இந்த தனி செயலியை (அப்) நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் எஸ்.பி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இனி போலீசார் இந்த செயலி மூலமாக வார விடுமுறைக்கு விண்ணப்பிக்க வேண்டும். யார், யார் எப்போது வார விடுமுறை எடுக்கிறார்கள். அவர்களுக்கு முறையாக வார விடுமுறை அனுமதிக்கப்பட்டு இருக்கிறதா? என்பதை நேரடியாக எஸ்.பி. கண்காணிக்க முடியும். இந்த செயலியை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கோணம் அரசு பொறியியல் கல்லூரி, தகவல் தொழில் நுட்ப மாணவர்கள் குணாளன், ஹரி சுந்தர் தினேஷ், பாலாஜி ஆகியோர் தங்களது பேராசிரியர் பானுமதி வழிகாட்டுதல் படி ஸ்டார்ட் அப் தமிழ்நாடு திட்டத்தின் கீழ் உருவாக்கி உள்ளனர்.

இதை தொடங்கி வைத்து எஸ்.பி. ஸ்டாலின் கூறியதாவது: போலீசார், ஆப் மூலம் தான் இனி வாரவிடுமுறைக்கு விண்ணப்பிக்க வேண்டும். கண்டிப்பாக வாரம் ஒருமுறை என மாதத்துக்கு 4 நாட்கள் அனைத்து போலீசாருக்கும் (ஆயுதப்படை உள்பட) விடுமுறைகள் வழங்கப்பட்டு இருக்க வேண்டும். ஒரு வேளை தவிர்க்க முடியாத பாதுகாப்பு பணிகள் உள்ளிட்டவை இருந்தால் இந்த வார விடுமுறை நிராகரிக்கப்பட்டு வேறொரு நாளில் வழங்கப்படும். இதன் மூலம் ஒவ்வொரு காவலர்களும் முறையாக வார விடுமுறை வழங்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

* ஏ.ஐ ஹேண்ட் புக்

வார விடுமுறைக்காக புதிய செயலி தொடங்கப்பட்டுள்ள நிலையில், போலீசாருக்கான ஏ.ஐ. ஹேண்ட் புக் என்ற புதிய ஆப் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஏ.ஐ. தொழில் நுட்பத்துடன் இயங்கும் இந்த ஆப் பயன்படுத்தி போலீசார் தங்களுக்கு காவல்துறை நிர்வாக ரீதியாக உள்ள சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உரையாடல் பதிவு இருக்கும். இந்த ஏ.ஐ. ஹேன்ட் புக் திட்டத்தையும் எஸ்.பி. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.