சென்னை: தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளில் மின்சார செலவை குறைக்கும் வகையில் புதிய ஆராய்ச்சியில் சென்னை ஐஐடி ஈடுபட்டு வருகிறது. இந்தியாவின் முதல் ஹைப்பர் லூப் திட்டம், செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி, பசுமை தொழில்நுட்பம் போன்ற துறைகளில் முன்னணி வகிக்கும் சென்னை ஐஐடி தமிழக தொழிற்சாலைகளின் மின் தேவையை குறைக்கும் புதிய முயற்சியாக ஒரு ஆராய்ச்சி செய்து வருகிறது.
அதன்படி, சென்னை ஐஐடி இன்குபேஷன் செல் மூலம் உருவாக்கப்பட்ட சீரோவாட்ஸ் என்ற நிறுவனம் மூலமாக தொழிற்சாலை கூடங்களில் மின்சார செலவுகளை குறைக்கவும், கார்பன் பயன்பாட்டை குறைக்கவும் ஏஐ தொழில்நுட்பத்துடன் ஆராய்ச்சியில் இறங்கி உள்ளன. 100க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் தனது சேவையை வழங்கி வரும் சீரோ வாட்ஸ் நிறுவனம் ஸ்டீல், ஆட்டோ மொபைல், உணவு பதப்படுத்துதல், மருந்து, ஐவுளி போன்ற துறைகளிலும் தனது பங்களிப்பை அளித்து வருகின்றன.
தற்போது தொழிற்சாலைகளில் மின்சார பயன்பாட்டை கண்காணித்து அதிக மின்சாரம் பயன்படுத்தும் இடங்களை கண்டுபிடித்து, அதனை சரிசெய்ய உதவும் பணியில் ஈடுபட்டுள்ளன. இதனால் தொழிற்சாலைகளுக்கு மின்சார செலவும், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் கார்பன் பயன்பாடும் குறைகிறது. சீரோவாட்ஸ் நிறுவனத்தின் இந்த முயற்சி, தொழிற்சாலைகளுக்கு மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலுக்கும் நன்மை பயக்கும். இதனை பல்வேறு இடங்களில் பயன்படுத்த ஆராய்ச்சி நடந்து வருகிறது.