Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உடலுறுப்பு தானத்தில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு தேர்வு : ஒன்றிய அரசால் வழங்கப்பட்ட விருதை முதல்வரிடம் காண்பித்து வாழ்த்து!!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (12.8.2025) தலைமைச் செயலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் சந்தித்து, ஒன்றிய அரசின் சுகாதாரத் துறையின் சார்பில் புது தில்லியில் நடைபெற்ற “15-வது இந்திய உறுப்பு தான தினம் 2025” நிகழ்ச்சியில், உடலுறுப்பு தானத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்ட 2024-ஆம் ஆண்டின் இந்தியாவிலேயே சிறந்த மாநிலத்திற்கான தேசிய விருது, சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் சென்னை இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக் குழுவிற்கு வழங்கப்பட்ட மூளை சாவு அடைந்த நோயாளிகளை பராமரிக்கும் சிறந்த குழுவிற்கான விருது ஆகியவற்றை காண்பித்து வாழ்த்து பெற்றார்.

உறுப்புதானம் வழங்குவதில் இந்தியாவிற்கே தமிழ்நாடு ஒரு வழிகாட்டியாக விளங்கி வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் 23 அன்று மூளைச்சாவு அடைந்து உறுப்பு தானம் வழங்குபவரின் உடலுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது முதல், இதுவரையில் 479 நபர்கள் உடல் உறுப்பு தானம் செய்து அவர்களுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மட்டும் 268 பேர் உடலுறுப்பு தானம் செய்து இந்தியாவிலேயே தமிழ்நாடு ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பதில் முதன்மையான மாநிலமாக விளங்குகிறது. உடலுறுப்பு தானத்தில் தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினை பாராட்டி, ஒன்றிய அரசின் சார்பில் புதுடெல்லியில் நடைபெற்ற “15-வது இந்திய உறுப்பு தான தினம் 2025” நிகழ்ச்சியில், உடலுறுப்பு தானத்தில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டு, 2024-ஆம் ஆண்டிற்கான விருதினை ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் திரு.ஜெ.பி.நட்டா அவர்கள், தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணைய உறுப்பினர் செயலாளர் மரு.கோபாலகிருஷ்ணன் அவர்களிடம் வழங்கினார்.

மேலும், புதுதில்லியில் நடைபெற்ற அந்நிகழ்ச்சியில், சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் சென்னை இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் மரு.தேரணிராஜன் அவர்கள் தலைமையிலான குழுவிற்கு (மரு. கோமதி கார்மேகம், மரு. ஜெயந்தி மோகனசுந்தரம், மரு. ராகவேந்திரன்) உறுப்பு தானம் மற்றும் உறுப்புமாற்று அறுவை சிகிச்சை துறையில் சிறப்பான பங்களிப்பிற்காக மூளை சாவு அடைந்த நோயாளிகளை பராமரிக்கும் சிறந்த குழுவிற்கான விருது வழங்கப்பட்டது. அவ்விருதினையும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

இந்நிகழ்வில், துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் திரு. நா. முருகானந்தம், இ.ஆ.ப., மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் ப. செந்தில் குமார், இ.ஆ.ப., மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் (பொறுப்பு) மரு. தேரணிராஜன், சென்னை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு. க. சாந்தாராமன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.