தமிழக எரிசக்தி துறை செயலாளர் பீலா வெங்கடேசன் திடீர் மரணம்: கொரோனா காலத்தில் சுகாதாரத்துறை செயலாளராக இருந்தவர்
சென்னை: தமிழக எரிசக்தி துறை செயலாளர் பீலா வெங்கடேசன் (56) திடீரென்று நேற்று இரவு மரணமடைந்தார். தமிழக அரசில் எரிசக்தி செயலாளராக இருந்தவர் பீலா வெங்கடேசன். இவர் உடல்நலக்குறைவு காரணமாக தரமணியில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் நீலாங்கரையில் உள்ள வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
பீலா வெங்கடேசனின் சொந்த ஊர் கன்னியாகுமரி. 1969ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதி பிறந்தார். இவரது தந்தை வெங்கடேசன். முன்னாள் டிஜிபி. சிறைத்துறையில் கடைசியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தாய், ராணி வெங்கடேசன். இவர், காங்கிரஸ் கட்சியின் சார்பில் சாத்தான்குளம் எம்எல்ஏவாக இருந்தார். பீலா வெங்கடேசனின் கணவர், ராஜேஸ். அவர் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக பணியாற்றி சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்.
இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து பெற்றனர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். பீலா வெங்கடேசன், எம்பிபிஎஸ் முடித்துள்ளார். திருமணத்திற்குப் பிறகு கணவர் ஐபிஎஸ் ஆக இருந்ததால், இருவருக்கும் இடையே எழுந்த கருத்து மோதலால், ஐஏஎஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்று ஒடிசா மாநில ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தார். இவர், ஒன்றிய அரசில் ஜவுளித்துறையில் பணியாற்றியுள்ளார். பின்னர் தமிழக அரசுப் பணிக்கு திரும்பினார்.
தமிழகத்தில் கொரோனா காலத்தில் சுகாதாரத்துறை செயலாளராக சிறப்பாக பணியாற்றினார். தற்போது எரிசக்தி துறை செயலாளராக பணியாற்றி வந்தார். ஓய்வு பெறுவதற்கு 4 ஆண்டுகள் உள்ளன. பீலா வெங்கடேசன் மரணமடைந்த தகவல் தெரிந்ததும், பல ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்: தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர் பீலா வெங்கடேசன் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் சவால் மிகுந்த மருத்துவத் துறைச் செயலாளராகப் பணியாற்றியவர். மேலும் பல பெரும் பொறுப்புகளில் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றிருந்த அவரது அகால மரணம் மிகுந்த வருத்தமளிக்கிறது. அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அரசு உயர் அலுவலர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.