Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தமிழகம் உள்பட தேர்தல் நடக்க உள்ள மாநிலங்களில் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம்: அடுத்த வாரம் தொடங்கப்படும்; உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்

சென்னை: தமிழகம் உள்ளிட்ட தேர்தலை சந்திக்க உள்ள மாநிலங்களில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் அடுத்த வாரம் தொடங்க உள்ளதாக தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சென்னை தி.நகர் தொகுதியில் வாக்குச்சாவடி அதிகாரிகளாக உள்ள திமுகவினர் ஆளுங்கட்சிக்கு சாதகமாக 13 ஆயிரம் அதிமுக ஆதரவாளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளதாகக் கூறி தி.கர் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்தியநாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், 1998ம் ஆண்டு தி.நகர் தொகுதியில் 2 லட்சத்து 8 ஆயிரத்து 349 வாக்காளர்கள் இருந்த நிலையில், 30 ஆண்டுகளுக்கு பிறகு 2021ம் ஆண்டு வெறும் 36 ஆயிரத்து 656 வாக்காளர்கள் மட்டுமே அதிகரித்துள்ளனர். மக்கள் தொகைக்கும், வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கைக்கும் பெரும் வித்தியாசம் உள்ளது. தொகுதியில் அதிமுக ஆதரவாளர்கள் 13 ஆயிரம் பேரின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படவில்லை.

இது சம்பந்தமாக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு புகார் மனுக்கள் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால், தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு தி.நகர் தொகுதியில் வாக்காளர் பட்டியலை மீண்டும் சரி பார்த்து தவறான சேர்க்கை, நீக்கத்தை களைந்து இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிடுமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள் முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் எம்.கணேசன், ஜெ.ஹெச்.இனியன் ஆகியோர் ஆஜராகி, தி.நகர் தொகுதியில் மொத்தமாக வாக்காளர்கள் சேர்க்கையும், நீக்கமும் நடந்துள்ளதால், அவற்றை சரிபார்த்து திருத்தக் கோரி தேர்தல் ஆணையத்துக்கு பல மனுக்கள் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், இது சம்பந்தமாக தமிழில் உள்ள ஆவணங்களை மொழிபெயர்த்து தாக்கல் செய்ய ஏதுவாக விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்று கோரினர். அப்போது, தேர்தல் ஆணையம் தரப்பில் நிரஞ்சன் ஆஜராகி, நாடு முழுவதும் தேர்தல் நடக்கவுள்ள தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில், பீகாரைப் போன்ற சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள், அடுத்த வாரம் தொடங்க உள்ளது. அப்போது, மனுதாரர் தெரிவித்த புகார்கள் கவனிக்கப்படும் என்றார்.

இதையடுத்து, மனுதாரர் தரப்பு கோரிக்கையை ஏற்று வழக்கை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், பீகார் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நகல்களை தாக்கல் செய்யுமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர். அடுத்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள பீகார் மாநிலத்தில் கடந்த ஜூன் மாதம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், 47 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். பாஜ கூட்டணிக்கு எதிராக வாக்களிக்கும் வாக்காளர்களின் பெயர்கள் குறிவைத்து நீக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா,அசாம், மேற்கு வங்காளத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை தொடங்க உள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* பீகார் மாநிலத்தில் கடந்த ஜூன் மாதம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி நடந்தது. இதில் 47 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.

* அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காளத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை தொடங்க உள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.