சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியாவிலேயே அதிக வளர்ச்சி பெற்ற மாநிலம் தமிழ்நாடு என்பதும்; இரட்டை இலக்க வளர்ச்சி பெற்ற ஒரே மாநிலம் தமிழ்நாடு என்பதும், ஒரு மாய விளம்பரம் என்பதை சுட்டிக்காட்ட வேண்டியது எதிர்க்கட்சியின் கடமை. திமுக அரசு, இரு இலக்க வளர்ச்சி பெற்ற ஒரே மாநிலம் தமிழ்நாடு என்று மார்தட்டிக்கொண்டு பெரிய பெரிய விளம்பரங்களை வெளியிட்டு ஒரு மாயத் தோற்றதை உருவாக்குகிறது. இந்த கணிப்பு இறுதியானது அல்ல என்பதும் அடுத்தடுத்த கணிப்புகளில் இது மாறலாம் என்பதுமே உண்மை.
ஒரு மாநில உற்பத்தி மதிப்பு என்பது விவசாயம் சார்ந்த துறைகள், தொழில் துறை, சேவைத் துறை ஆகியவற்றின் உற்பத்தி மதிப்பை காட்டும். தமிழ்நாடு போன்ற தொழில் மற்றும் சேவை தொழில் உள்ள மாநிலங்களில் உற்பத்தி மதிப்பு உயர்ந்தாலும், உண்மையான தனிமனித வருமானம் உயர்ந்ததாக கருத முடியாது. உதாரணமாக கார் உற்பத்தி, கைபேசி உற்பத்தி, வங்கி கடன், இன்சூரன்ஸ் போன்றவை அதிக மதிப்பு காட்டினாலும், அதன் பலன் மக்களை பரவலாக சென்றடையாது.
கட்டுமானத் துறை வளர்ச்சிக்கு, அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மெட்ரோ ரயில், சாலைகள், நீர்ப் பாசன திட்டங்கள் போன்றவையே காரணம். எனவே, திமுக பெருமை கொள்வதற்கு இதில் எதுவுமே இல்லை. ஆனாலும், தமிழ்நாடு இந்திய அளவில் உள்ள சராசரி வளர்ச்சியைவிட, எப்போதுமே அதிக வளர்ச்சி பெற்று வருகிறது. குறுகிய காலத்தில் இந்த வளர்ச்சியை பெற முடியாது. அதற்கு அடித்தளம் போட்டது அதிமுக அரசு. அதனாலேயே தமிழ்நாடு சரிவில்லாமல் வளர்ச்சி பெறுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.