சென்னை: புதிதாக உருவாக்கப்பட்ட வேளாங்கண்ணி மற்றும் உத்திரமேரூர் டிஎஸ்பிக்கள் உள்பட தமிழகம் முழுவதும் 59 டிஎஸ்பிக்களை பணியிடமாற்றம் செய்து காவல்துறை டிஜிபி (பொறுப்பு) வெங்கடராமன் உத்தரவிட்டுள்ளார். அவர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: சென்னை மாநில சைபர் கமாண்ட் மையம் டிஎஸ்பியாக இருந்த இலக்கியா வேலூர் போதை பொருள் தடுப்பு பிரிவு சிஐடி டிஎஸ்பியாக நியமிக்கப்படுகிறார்.
புதுக்கோட்டை மாவட்டம் குற்றஆவணம் காப்பகம் டிஎஸ்பியாக இருந்த குமார், சென்னை தலைமையிடம் பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பியாகவும், திருநெல்வேலி மாநகர சமூக நீதி மற்றும் மனித உரிமை ஆணைய உதவி கமிஷனராக இருந்த நிக்சன் நாகப்பட்டினம் மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட வேளாங்கண்ணி டிஎஸ்பியாகவும், சென்னை மாநில மனித உரிமை ஆணையம் டிஎஸ்பியாக இருந்த முருகேசன் நாகப்பட்டினம் மாவட்டம் குற்றப்பிரிவு டிஎஸ்பியாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுபோல், காஞ்சிபுரம் மாவட்டம் சமூக நீதி மற்றும் மனித உரிமை ஆணையம் டிஎஸ்பியாக இருந்த ராதாகிருஷ்ணன் காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட உத்திரமேரூர் டிஎஸ்பியாகவும், மதுரை டிவிஷன் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிஐடி டிஎஸ்பியாக இருந்த செந்தில்குமார் சென்னை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிஐடி தலைமையிட டிஎஸ்பியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை மாநில சைபர் கமாண்ட் சென்டர் டிஎஸ்பியாக இருந்த கீதா சென்னை சிபிசிஐடி சைபர் க்ரைம் பிரிவு டிஎஸ்பியாகவும் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு தலைமையிட டிஎஸ்பியாக இருந்த பூசை துரை, சோசியல் மீடியா மையம் டிஎஸ்பியாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுதவிர, கன்னியாகுமரி மாவட்டம் சமூக நீதி மற்றும் மனித உரிமை ஆணையம் டிஎஸ்பியாக இருந்த பாலாஜி திருவள்ளூர் மாவட்டம் குற்றப்பிரிவு டிஎஸ்பி என மொத்தம் தமிழ்நாடு முழுவதும் 59 டிஎஸ்பிக்கள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு டிஜிபி உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
