சென்னை: தமிழ்நாட்டில் 4,829 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இந்தக் கடைகளுடன் கூடிய 3,240 பார்கள் இருக்கின்றன. இந்த டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் ஒரு நாளைக்கு ரூ.120 கோடி முதல் ரூ.130 கோடி வரை மது விற்பனை நடைபெறுகிறது. வார இறுதி நாட்களில் அது ரூ.140 கோடி முதல் ரூ.150 கோடியாக அதிகரிக்கிறது. பண்டிகை காலங்களில் மது விற்பனை மேலும் 15 சதவீதம் உயருகிறது. கடந்த ஆண்டு தீபாவளி மது விற்பனை ரூ.438 கோடியாக இருந்தது. இந்த ஆண்டு ரூ.600 கோடிக்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
ஆனால், இலக்கையும் தாண்டி ரூ.789 கோடியே 85 லட்சத்துக்கு மது விற்பனை நடந்துள்ளது. அதாவது, கடந்த 18-ந் தேதி ரூ.230 கோடியே 6 லட்சத்திற்கும், 19-ந் தேதி ரூ.293 கோடியே 73 லட்சத்திற்கும், நேற்று (தீபாவளி) ரூ.266 கோடியே 6 லட்சத்திற்கும் என மொத்தம் ரூ.789 கோடியே 85 லட்சத்திற்கு மது விற்பனை நடந்துள்ளது. மண்டலம் வாரியாக பார்க்கும்போது, அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் ரூ.158 கோடியே 25 லட்சத்திற்கும், திருச்சி மண்டலத்தில் ரூ.157 கோடியே 31 லட்சத்திற்கும், சேலம் மண்டலத்தில் ரூ.153 கோடியே 34 லட்சத்திற்கும், மதுரை மண்டலத்தில் ரூ.170 கோடியே 64 லட்சத்திற்கும், கோவை மண்டலத்தில் ரூ.150 கோடியே 31 லட்சத்திற்கும் மது விற்பனை நடைபெற்றுள்ளது.