சென்னை: தமிழகத்தில் டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டார். புதிய டிஜிபியை நியமனம் செய்வதற்கான பட்டியலுக்கு ஒப்புதல் அளிக்கும்படி தமிழக அரசு ஒன்றிய உள்துறைக்கு அனுப்பிய கடிதத்தில், டிஜிபியாக தகுதி பெற்றவர்கள் என்று கூறி சீமா அகர்வால், ராஜீவ்குமார், சந்தீப் ராய் ரத்தோர், வன்னியபெருமாள், மகேஷ்குமார் அகர்வால், வெங்கட்ராமன், வினித் தேவ் வாங்டே, சஞ்சய் மாத்தூர், டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகிய 10 பேர் இடம் பெற்றிருந்தனர்.
இந்தப் பட்டியலில் இருந்து 3 பேரை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நேற்று காலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் தலைமைச் செயலாளர் முருகானந்தம், உள்துறைச் செயலாளர் தீரஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். வழக்கமாக ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் பட்டியலை ஆய்வு செய்தவுடன் 3 பேர் கொண்ட பட்டியலை ஒன்றிய அரசு தயாரித்து மாநிலங்களுக்கு வழங்கும்.
இதுபோன்று இதுவரை தமிழகத்துக்கு 3 பேர் வழங்கப்பட்டு வந்தனர். ஒன்றிய அரசின் விதிமுறைப்படி பட்டியல் தயாரிக்கப்பட்டால், சீமா அகர்வால், சந்தீப் ராய் ரத்தோர், மகேஷ்குமார் அகர்வால் ஆகியோர் தகுதி பெற மாட்டார்கள் என்றும், ராஜீவ்குமார், வன்னியபெருமாள், வெங்கட்ராமன் ஆகிய 3 பேர்தான் தகுதி பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
ஆனால் தமிழக அரசின் கோரிக்கையை ஒன்றிய அரசு ஏற்குமா? அல்லது அவர்கள் புதிய காரணங்களை கூறுவார்களா? என்ற பரபரப்பு எழுந்துள்ளது. ஆனால் நேற்றைய கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்பட்டது என்ற விவரம் வெளியாகவில்லை. ஒன்றிய அரசு 3 பேரின் பட்டியலை அளித்த பிறகுதான் அதில் இருந்து ஒருவரை தேர்வு செய்வதா அல்லது ஒன்றிய அரசின் பட்டியலை ஏற்க மறுத்து விடுவதா என்பது குறித்து தமிழக அரசு முடிவு செய்யும் என்று கூறப்படுகிறது.