Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

2026ம் ஆண்டிலும் திராவிட மாடல் ஆட்சிதான்; தமிழ்நாடு எப்போதும் டெல்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோல்தான்.! திருவள்ளூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த ஆண்டார்குப்பத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில், பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், ரூ.418.15 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். ரூ.390.74 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினர். மேலும், ரூ.357.43 கோடி மதிப்பில் 2 லட்சத்து 2 ஆயிரத்து 531 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார். விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: பல்வேறு திட்டங்களை திராவிட மாடல் ஆட்சியில் வழங்கி வருகிறோம். 10 ஆண்டுகால அ.தி.மு.க. இருண்ட ஆட்சியில் முடங்கிக்கிடந்த உட்கட்டமைப்பு பணிகள் கடந்த 4 ஆண்டுகளாக சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த விழாவில் 63 ஆயிரத்து 124 பேருக்கு பட்டா வழங்கப்படுகிறது. இதுதான் எனக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணம். அரசின் அக்கறையான நிர்வாகத்தால் அனைத்து துறையிலும் மாநிலம் வளர்ச்சியடைந்துள்ளது. நாட்டிற்கே முன்னோடியாக பல்வேறு திட்டங்களை திராவிட மாடல் அரசு செய்து வருகிறது. தி.மு.க. ஆட்சியில் தன்னம்பிக்கையும் வளர்ந்துள்ளது, தமிழ்நாடும் வளர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள் பொறுப்பான எதிர்க்கட்சியாக செயல்படாலம் தமிழ்நாட்டிற்கே எதிரிக்கட்சிகளாக செயல்படுகின்றன. தமிழகத்திற்கும் , தமிழக மக்களுக்கும் எதிரானவர்களோடு உறவாடி தமிழ்நாட்டை அடகுவைக்கும் எண்ணத்தை கொண்டுள்ளனர். நீட் தேர்வு எதிர்ப்பு, மும்மொழி திட்டம் நிராகரிப்பு, வக்பு திருத்தச்சட்ட எதிர்ப்பு, தொகுதி மறுசீரமைப்பால் பாதிக்கப்படும் மாநிலங்களை ஒன்றுதிரட்டுதல் போன்றவற்றில் நாம்தான் இந்திய அளவில் வலுவாக குரல் கொடுத்து வருகிறோம். மாநில உரிமைகளின் அகில இந்திய முகமாக திமுக உள்ளது.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்துதான் தமிழகம் போராடுகிறது. மாநிலங்களின் உரிமைகளை கேட்பது தவறா?கவர்னருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு சென்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை பெற்றோம். இதுதான் தி.மு.க.வின் சக்தி. நீட் தேர்வில் விலக்கு தருவோம் என்று அமித்ஷா கூற முடியுமா? இந்தியை திணிக்கமாட்டோம் என்று கூற முடியுமா? தமிழ்நாட்டிற்கு இவ்வளவு சிறப்பு நிதியை கொடுத்துள்ளோம் என்று பட்டியல் போட முடியுமா? தொகுதி சீரமைப்பால் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறையாது என்று வாக்குறுதி கொடுக்க முடியுமா? எவ்வளவு கொடுத்தாலும் இங்கு அழுகின்றனர் என்று பிரதமர் மோடி கூறினார்.

மத்திய அரசிடம் கையேந்தி நிற்க மாநிலங்கள் பிச்சைக்காரர்களா? என்று நீங்கள் கூறியதை உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன். நாங்கள் கேட்பது அழுகையல்ல, தமிழ்நாட்டின் உரிமை.நான் அழுது புலம்புவனும் அல்ல, ஊர்ந்து சென்று யார் காலில் விழுபவனும் அல்ல. உறவுக்கு கைகொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம். டெல்லி ஆளுகைக்கு தமிழ்நாடு என்றுமே அடிபணியாது. தமிழ்நாடு தனித்தன்மை கொண்டது. 2026-லும் திராவிட மாடல் ஆட்சிதான். தமிழ்நாடு எப்போதும் டெல்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோல்தான். அமித்ஷா அல்ல, எந்த ஷா வந்தாலும் தமிழ்நாட்டை ஆள முடியாது ' இவ்வாறு அவர் கூறினார்.