தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளில் எஸ்.ஐ.ஆர் கணக்கெடுப்பு தொடங்கியது: 77,000 அலுவலர்கள் வீடுவீடாக சென்று விண்ணப்பம் அளிக்கின்றனர்
சென்னை: தமிழகம் முழுவதும் 234 சட்டப்பேரவை தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி (எஸ்.ஐ.ஆர்.) நேற்று தொடங்கியது. இந்த பணியில் 77 ஆயிரம் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் வீடுவீடாக சென்று விண்ணப்பம் அளித்து வருகின்றனர். இந்தியாவில் சுமார் 21 ஆண்டுகளுக்கு பிறகு முதல்கட்டமாக பீகாரில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணி நடத்தப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, 2ம் கட்டமாக அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்து இருந்தது. தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2026) ஏப்ரல் மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தும் பணிகள் நேற்று (4ம் தேதி) முதல் வீடுவீடாக தொடங்கி உள்ளது.
குறிப்பாக, தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள், முகவரி மாறியவர்களின் பெயர்கள் இடம்பெற்று உள்ளன. பல வாக்காளர்களின் பெயர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளிலும் உள்ளன. எனவே தகுதியான வாக்காளர்களை மட்டுமே பட்டியலில் இடம் பெற செய்ய வேண்டும், போலி வாக்காளர்களை நீக்க வேண்டும் என்பதற்காக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியின் முக்கிய நோக்கம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளிலும் நேற்று (4ம் தேதி) முதல் டிசம்பர் 4ம் தேதி வரை வாக்காளர்களை கணக்கெடுக்கும் பணியை அரசியல் கட்சிகளின் பூத் ஏஜென்ட்கள் துணையுடன் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள அரசு ஊழியர்கள் மேற்கொண்டனர். இதை தொடர்ந்து வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 9ம் தேதியும், இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7ம் தேதியும் வெளியிடப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 2ம் தேதி நடந்த அனைத்துக்கட்சிகளின் கூட்டத்தில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை ஒத்திவைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் நேற்று முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடங்கியுள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறியதாவது:
தமிழகத்தில் 2002 மற்றும் 2005ம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி வாக்காளர் கணக்கெடுப்பு பணி நேற்று முதல் தொடங்கி உள்ளது. இந்த பட்டியல்கள் ஓட்டுச்சாவடி அலுவலர்களிடம் உள்ளன. இந்த பட்டியல்களுடன் அனைத்து வீடுகளுக்கும் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் செல்வார்கள். அந்த வீடுகளில் யாராவது இருந்தால் அவர்களின் விவரத்தை கேட்டு வாக்காளர் கணக்கெடுப்பு படிவத்தை வழங்குவார்கள். மேலும், அந்த வீட்டில் 18 வயது நிரம்பியவர்கள் அல்லது இதுவரை வாக்காளர் பட்டியலில் இடம் பெறாமல் இருந்தால் அதற்குரிய விண்ணப்ப படிவம் மற்றும் உறுதிமொழி படிவத்தை வழங்குவார்கள்.
அவற்றை உடனடியாக பூர்த்தி செய்து தரவேண்டியது அவசியம் இல்லை. 2வது அல்லது 3வது முறை ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வீட்டுக்கு வரும்போது விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பித்தால் போதுமானது. கடந்த 2002 மற்றும் 2005ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் தங்களது பெற்றோர், தாத்தா, பாட்டி பெயர்கள் இருந்தால் அதை தெரிவிக்க வேண்டும். உரிய ஆவணங்களை காட்டி டிசம்பர் 9ம் தேதி வெளியாகும் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற முடியும். முகவரி மாற்றம் எதுவும் இருந்தால் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாது.
முகவரி மாறியவர்களும், 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களும் அதற்கான ஆவணங்களை டிசம்பர் 7ம் தேதி முதல் ஜனவரி 3ம் தேதிக்குள் சமர்ப்பித்து தங்களது பெயர்களை இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெற செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார். இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தபடி, நேற்று முதல் தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடி நிலை அலுவலர் வீடுதோறும் சென்று வாக்காளர்களுக்கு முன்பே நிரப்பப்பட்ட கணக்கீட்டு படிவங்களை விநியோகித்து, பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை வழங்கினர்.
எந்தவொரு வாக்காளரும் விடுபடக்கூடாது என்பதை உறுதி செய்வதற்காக, பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை பெறுவதற்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஒவ்வொரு வீட்டுக்கும் மூன்று முறை செல்ல தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் ஜனவரி 1, 2026 நிலவரப்படி 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து தகுதியுள்ளவர்களும் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பம் அளிக்கலாம். இந்த பணிக்காக தமிழகம் முழுவதும் 77 ஆயிரம் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
* பழைய போட்டோவுக்கு பதில் புதிய கலர் போட்டோ ஒட்டலாம்
வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் கணக்கெடுப்பு படிவம் தவிர, வேறு எந்த ஆவணங்களும் கணக்கெடுப்பு காலத்தில் சமர்ப்பிக்க தேவையில்லை. கணக்கெடுப்பு படிவத்தில் வாக்காளரின் பெயர், அடையாள அட்டை எண், முகவரி ஆகியவை முன்பே அச்சிடப்பட்டு இருக்கும். வரிசை எண், பகுதி எண், பெயர், சட்டசபை, நாடாளுமன்ற தொகுதி பெயர், மாநிலம் ஆகிய விவரங்களும் அச்சிடப்பட்டு இருக்கும். கியூஆர் குறியீடும் இடம்பெற்று இருக்கும். பழைய புகைப்படம் முன்பே அச்சிடப்பட்டு இருக்கும்.
புதிய புகைப்படத்தை ஒட்டுவதற்கும் இடம் விடப்பட்டு இருக்கும். அனைத்து வாக்காளர்களும் தங்களது சமீபத்திய கலர் போட்டோவை ஒட்டலாம். இதை தொடர்ந்து, படிவத்தில் தங்களது பிறந்த தேதி, ஆதார் எண், மொபைல் போன் எண், தந்தை அல்லது பாதுகாவலர் பெயர், அவர்களது வாக்காளர் அடையாள அட்டை எண், தாயின் பெயர், தாயின் வாக்காளர் அடையாள அட்டை எண், கணவர், மனைவி பெயர், வாக்காளர் அடையாள அட்டை எண் உள்ளிட்ட கடந்த 2002-04ம் ஆண்டு நடந்த சிறப்பு திருத்த பணியின்போது இருந்த விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
புதிய வாக்காளர்கள் சேர்க்கைக்கு, படிவம் 6 மற்றும் உறுதிமொழி படிவத்தை நிரப்ப வேண்டும். அதே சட்டசபை தொகுதியை சேர்ந்த வாக்காளராக இருந்தால், நீக்கம் செய்வதற்கு படிவம் 7 நிரப்ப வேண்டும். திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் தொடர்பாக, படிவம் 8 பூர்த்தி செய்ய வேண்டும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
