தமிழகத்தில் கோல்ட்ரிப் இருமல் மருந்து சர்ச்சையைத் தொடர்ந்து புரோபைலீன் கிளைகால் கரைப்பான் சேர்மத்தை ஆய்வு செய்ய வேண்டும்: உணவுப் பாதுகாப்புத் துறை உத்தரவு
சென்னை: உணவுப் பொருளின் ஈரப்பதத்தை தக்க வைக்கவும், சாஸ் போன்ற பொருள்களை கெட்டியான திரவமாக மாற்றவும், பேக்கரி பொருட்களை பாதுகாக்கவும், சுவையூட்டவும் புரோபைலீன் கிளைகால் உபயோகப்படுத்தப்படுகின்றன. இருமல் மருந்துகளில் பல்வேறு சேர்மங்களை கரைப்பதற்கும் இது பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், கடந்த இரு மாதங்களுக்கு முன்னர், தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிப் இருமல் மருந்தை உட்கொண்ட மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 21 குழந்தைகள் உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதுதொடர்பான ஆய்வில், புரோபைலீன் கிளைகாலுக்கு பதிலாக பெயிண்ட் மற்றும் ரசாயனப் பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தப்படும் எத்திலீன் கிளைகால் அதில் கலந்திருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, அந்த மருந்து நிறுவனம் மீதும், உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த சூழலில், தமிழகத்தில் உணவுப் பொருள்களில் சேர்ப்பதற்காக விற்பனை செய்யப்படும் புரோபைலீன் கிளைகால் கரைப்பானை ஆய்வுட்படுத்துமாறு உணவுப் பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அதிகாரிகள், சம்பந்தப்பட்ட விற்பனையகங்களில் அதன் மாதிரிகளை சேகரித்து பரிசோதனை நடத்தி வருகின்றனர். அதில் ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் அதன் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோன்று உரிய விகிதத்தில் அதனை கலக்க வேண்டும் என்றும் உணவு தயாரிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.


