சென்னை: அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவ - மாணவிகளுக்கு முட்டை வழங்குவதற்காக, ஓராண்டுக்கு தேவையான, 113.38 கோடி முட்டைகள் சப்ளை செய்ய தகுதியான நிறுவனத்தை தேர்வு செய்வதற்கான ‘டெண்டர்’ கோரப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் துறை சார்பில், சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு ஓராண்டிற்கு தேவையான முட்டைகள் கொள்முதல் செய்ய ரூ.690 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. அங்கன்வாடி மையங்கள் மற்றும் 1 முதல் 10ம் வகுப்பு வரை பள்ளிகளில் மதியம் வழங்கும் சத்துணவுடன் முட்டை வழங்கப்படுகிறது.
அதன்படி, பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்களில் 38,77,438 மாணவ, மாணவிகள் பயன் பெறுகின்றனர். அங்கன்வாடி மையங்களில் 18,00,274 குழந்தைகள் பயன் பெறுகின்றனர். இந்த முட்டையை ஓராண்டுக்கு மண்டல வாரியாக சப்ளை செய்ய, தகுதியான நிறுவனங்களை தேர்வு செய்ய, ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு இயக்குனரகம் ‘டெண்டர்’ கோரியுள்ளது. தேர்வு செய்யப்படும் நிறுவனம் ஒரு ஆண்டுக்கு, 113 கோடியே 38 லட்சத்து 78,948 முட்டைகள் சப்ளை செய்ய வேண்டும். முட்டை 45 முதல் 52 கிராம் எடையுள்ளதாக இருக்க வேண்டும் என டெண்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

