தமிழ்நாடு உள்ளிட்ட 16 மாநிலங்களின் பார் கவுன்சில் தேர்தலை நடத்தி முடிக்க கெடு விதிப்பு: உச்சநீதிமன்றம் உத்தரவு
புதுடெல்லி: நாடு முழுவதும் 20 பார் கவுன்சில் உள்ள நிலையில் 5 வருடங்களுக்கு ஒரு முறை பார் கவுன்சில்களுக்கான தேர்தலை இந்திய பார் கவுன்சில் நடத்த வேண்டும். ஆனால் 16 மாநில பார் கவுன்சிலர்களுக்கு 5 வருட பதவிக்காலம் நிறைவடைந்த பிறகும் இன்னும் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் இவ்வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி சூர்யகாந்த் மற்றும் கோடீஸ்வர்சிங் தலைமையிலான அமர்வில் நடைபெற்று வருகிறது.இந்த வழக்கில் நேற்று உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், தெலுங்கானா , உத்தரபிரதேசம் ஆகிய 2026 பிப்ரவரி 28ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் ராஜஸ்தான், மேற்குவங்கம், ஜார்கண்ட், கர்நாடகா, குஜராத், பஞ்சாப் மற்றும் ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களின் பார் கவுன்சில் தேர்தல்கள் 2026 மார்ச் 15ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும்.
இதேபோல் மேகாலயா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களின் பார் கவுன்சில் தேர்தல் 2026 மார்ச் 31ம் தேதிக்குள் தமிழ்நாடு, கேரளா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களின் பார் கவுன்சில் தேர்தல் 2026 ஏப்ரல் 30ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும். அதே நேரத்தில் மணிப்பூர் மாநில பார் கவுன்சில் தேர்தல் 2027ம் ஆண்டு நடத்த அனுமதி வழங்கியதோடு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்ட ஆறு நாட்களுக்குள் தேர்தல் முடிவுகள் வெளியிட வேண்டும் என்றும் பார் கவுன்சிலுக்கு உத்தரவிட்டனர்.


