தமிழகத்தை போல அடுத்த கல்வியாண்டு முதல் தெலங்கானாவிலும் காலை உணவு திட்டம்: முதல்வர் ரேவந்த் ரெட்டி பேச்சு
சென்னை: கல்வியில் சிறந்த தமிழ்நாடு எனும் பிரமாண்ட நிகழ்ச்சியில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் பேசியதாவது: தமிழ்நாடு கல்வியிலும், விளையாட்டிலும் மிக சிறந்து விளங்குகிறது. காலை உணவு திட்டம் ஈடு இணையற்ற திட்டம். ஏழை எளிய மக்களின் நலனுக்காக இந்த திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். இதை பார்த்ததும் நான் ஒரு முடிவு செய்து விட்டேன். தெலங்கானாவில் அடுத்த கல்வியாண்டு முதலாக காலை உணவு திட்டத்தை நாங்களும் செயல்படுத்த போகிறோம். எனது இனிய நண்பரான மு.க.ஸ்டாலினிடம் இருந்து இந்த திட்டத்தை எடுத்துக் கொள்கிறேன்.
நான் முதல்வன் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் போன்ற சிறப்பான திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினை மனதார பாராட்டுகிறேன். தமிழ் மக்களாகிய நீங்கள், இப்படியொரு சிறந்த முதல்வர் கிடைத்ததற்காக பெருமைப்பட வேண்டும். தமிழ்நாட்டின் மாடல் ஒட்டு மொத்த இந்தியாவுக்கே உதாரணமாக உள்ளது. தமிழ்நாடும், தெலங்கானாவும் ஒரே மாதிரியான கலாச்சாரங்களை கொண்டுள்ளன. சமூகநீதியும் தெலங்கானாவிலும், தமிழகத்திலும் பொதுவானதாக உள்ளது. சமூக நீதியில் எங்களுக்கு முன்னுதாரணம் யார் தெரியுமா? கருணாநிதி தான்.
மற்றொரு அறிவிப்பையும் நான் இங்கு அறிவிக்கிறேன். தெலங்கானாவில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் தமிழ்நாட்டில் இருப்பதை போலவே 69 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தப் போகிறேன். கல்வி மட்டுமல்ல விளையாட்டிலும் சிறந்த மாநிலமாக தமிழகம் உள்ளது. தெலுங்கு மற்றும் தமிழக மக்கள் நூற்றாண்டு கால நட்பு கொண்டவர்கள். தமிழ்நாடு அரசு பட்டதாரிகளுக்கு தொழில் திறன் பயிற்சி வழங்கப்பட்டு வேலைவாய்ப்புகள் உறுதி செய்கிறது. அதே போல, தெலங்கானாவிலும் இந்த திட்டத்தை நாங்கள் செயல்படுத்த போகிறோம்.
தெலங்கானாவில் ஆண்டுதோறும் ஒரு லட்சத்து 10 ஆயிரம் பொறியியல் மாணவர்கள் படித்து முடித்து வெளியே வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கு போதிய வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. இந்தியா ஸ்கில்ஸ் யூனிவர்சிட்டி என்பதை ஏற்படுத்தி மாணவர்கள் திறனை மேம்படுத்தி வருகிறேன். தமிழ்நாட்டை பின்பற்றி, விளையாட்டு பல்கலைக்கழகம் உருவாக்கி இருக்கிறேன். தமிழ்நாடு விளையாட்டு வீரர்களை எங்கள் மாநிலத்துக்கு பயிற்சிக்கு அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். 2028ல் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கங்களை வெல்வதற்கு இரண்டு மாநிலங்களும் சேர்ந்து முயற்சி செய்ய வேண்டும். உயர்ந்த கல்வியை ஏழை எளிய மாணவர்களுக்கு அளிக்க வேண்டும். அவர்களின் கனவை நினைவாக வேண்டும். இதற்காக தமிழ்நாடு அரசுடன் இணைந்து செயல்பட தெலங்கானா அரசு தயாராக உள்ளது. இவ்வாறு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறினார்.