Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழகம் முழுவதும் பதற்றமானதாக கண்டுபிடிக்கப்பட்ட 8,050 வாக்குச்சாவடிகளில் கூடுதலாக துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு: கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும் ஏற்பாடு

சென்னை: தமிழகம் முழுவதும் பதற்றமானதாக கண்டறியப்பட்டுள்ள 8,050 வாக்குச்சாவடி மையங்களிலும் கூடுதலாக துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் 13 நாட்களே உள்ளதால் அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்ள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் அமைதியான முறையில் தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணைய அதிகாரிகள் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்கள்.

தமிழகத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகள் எவ்வளவு உள்ளன என்பது பற்றி 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் போலீசார் ஆய்வு நடத்தினர். இதில் மொத்தம் உள்ள 68,320 வாக்குச்சாவடிகளில் 8,050 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்பது கண்டறியப்பட்டு உள்ளது. 181 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என்பதும் தெரிய வந்துள்ளது. சென்னையிலும் 3 பாராளுமன்ற தொகுதிகளில் பதற்றமான வாக்குச்சாவடிகள் எவை எவை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தென்சென்னையில் 456 சாவடிகளும், வடசென்னையில் 254 சாவடிகளும், மத்திய சென்னையில் 192 சாவடிகளும் பதற்றமானவை என்பதும் தெரிய வந்துள்ளது. சென்னையில் மட்டும் 982 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அடையாளம் காணப்பட்டு உள்ளது.

பதற்றமான 8,050 வாக்குச்சாவடிகளிலும் தேர்தலின்போது கூடுதல் எண்ணிக்கையில் துணை ராணுவ படையினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் 200 கம்பெனி துணை ராணுவ படையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்கள் அனைவரும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் தேர்தலுக்கு முந்தைய நாளான 18ம் தேதி அன்றே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று தமிழக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். பதற்றமான வாக்குச்சாவடிகள் அனைத்திலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பணிகள் அடுத்த வார இறுதியில் தொடங்கப்படும். வாக்குச்சாவடி மையத்தை முழுமையாக கண்காணிக்கும் வகையில் ஓட்டு போட வரும் வாக்காளர்கள் வரிசையில் நிற்கும் இடங்கள், வாக்குப்பதிவு நடைபெறும் இடம் ஆகியவை தெரியும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.

துணை ராணுவ படையினருடன், உள்ளூர் போலீசாரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இப்படி பதற்றமான சாவடிகள் அனைத்திலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுப்பதற்கு பறக்கும் படை சோதனையும் ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதியிலும் எண்ணிக்கையை அதிகப்படுத்த அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தமிழகத்திற்காக நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் செலவின சிறப்பு பார்வையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். அதேநேரம், வருமான வரித்துறை அதிகாரிகளும் அனைத்து தொகுதிகளிலும் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.