சென்னை: மோன்தா புயல் ஆந்திராவில் கரை கடந்து சென்றதை அடுத்து, தமிழகத்தில் 4ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆந்திராவை கடந்து சென்ற மோன்தா புயல் தெலுங்கான மாநிலம் நோக்கி பயணிக்கத் தொடங்கியுள்ளதால் அங்கும் உயர் நிலை எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. ஐதராபாத்திலும் கனமழை பெய்யும். கர்னூல், மெகபூப் நகர் பகுதிகளிலும், வாரங்கல் பகுதி, கம்மம், விஜயவாடா பகுதியில் அதீத மழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று இரவு ஐதராபாத் விட்டு விலகி சத்தீஸ்கர் மாநிலத்துக்கு பகுதிக்கு நகரும். ராய்ப்பூர், நாக்பூர் வழியாக இரு காற்று இணைந்து மகாராஷ்ட்ரா மாநிலத்தை மையமாக வைத்து மழை பெய்யும் எ்ன்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நீண்ட நாட்களாக அரபிக் கடலில் நீடித்துக் கொண்டு இருக்கும் ஒரு ஆழ்ந்த காற்றழுத்தம், கிழக்கு நோக்கி நகர்ந்து குஜராத் வழியாக கரை கடந்து செயலிழக்கும். அதற்கு பிறகு தமிழகத்தில் 3ம் தேதியில் இருந்து வெப்பச் சலன மழை தொடங்கும். 5ம் தேதி ஆந்திர எல்லையோரம், 6ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் மழை பெய்யும். அதற்கு பிறகு வங்கக் கடலில் 7ம் தேதி புதிய காற்றழுத்தம் உருவாகும்.
இதையடுத்து, தமிழகத்தின் மழை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: நேற்று முன்தினம் இரவு ஆந்திராவுக்குள் சென்ற அதிதீவிர மோன்தா புயல்,வலு குறைந்து நேற்று புயலாக மாறியுள்ளது. மேலும் அது படிப்படியாக வலுகுறைந்து ஆழ்ந்த காற்றழுத்ததாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது மேலும் வடக்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று மாலையில் வலுக்குறைந்தது. அரபிக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமும், வடக்கு- வடக்கிழக்கு திசையில் நகர்ந்து மத்திய அரபிக் கடலை கடந்து செல்லும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் வட மாவட்டங்களில் பெரும்பாலும் வெயில் நிலவியது. ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை இன்று பெய்யும். நாளை முதல் நவம்பர் 4ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அதன் தொடர்ச்சியாக சென்னையில் இன்று ஓரளவுக்கு மேகமூட்டம் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது.
