சென்னை: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் நேற்று மழை பெய்துள்ளது. பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலை காணப்பட்டது. மதுரையில் 102 டிகிரி வெயில் கொளுத்தியது. அதன் தொடர்ச்சியாக கரூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டது.
இந்நிலையில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் நேற்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்தது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை இன்று முதல் 27ம் தேதி வரை பெய்யும். சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. வெப்பநிலை இயல்பை ஒட்டியும் 100 டிகிரி வரை உயர்ந்தும் காணப்படும்.