தமிழ்நாடு 2030ம் ஆண்டிற்குள் புதிய எச்ஐவி பாதிப்பு இல்லாத மாநிலமாக மாறும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
சென்னை: சென்னை, கலைவாணர் அரங்கில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பாக, எச்ஐவி/எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த் தொற்று குறித்த தீவிர விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. இதை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: எச்.ஐ.வி/எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் பாதிப்புகளால் சிகிச்சை பெற்று வருபவர்கள் தமிழ்நாட்டில் 1,39,350 பேர் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் கட்டணமில்லாமல் எச்.ஐ.வி/எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்களுக்கு சிகிச்சை வழங்க வேண்டும் என்கின்ற வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அந்தவகையில் முதற்கட்டமாக 4 தனியார் மருத்துவக் கல்லூரிகள் இந்த திட்டத்தில் இணைந்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக எச்ஐவி/எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்களுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1,39,350 பேர். புதிய நோய் பாதிப்புகள் பூஜ்ஜியம் நிலைக்கு கொண்டு வருவதற்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. 2030ம் ஆண்டிற்குள் புதிய எச்ஐவி/எய்ட்ஸ் பாதிப்புகள் இல்லாத மாநிலமாக தமிழ்நாடு கொண்டு வருவதற்குரிய உறுதி ஏற்று, ஒருங்கிணைந்து செயல்படுவோம்.
முதல்வர் கடந்த 10 நாட்களுக்கு முன்பாக காலை உணவு திட்டம் விரிவாக்கம் நிகழ்ச்சியில் இனிமேல் தமிழ்நாட்டில் மருத்துவமனைக்கு வருகிற நோயாளர்கள் என்று சொல்வதைக் காட்டிலும் “மருத்துவப் பயனாளர்கள்” என்று சொல்வதே சாலச் சிறந்ததாக இருக்கும், எனவே இனி முதற்கொண்டு “மருத்துவப் பயனாளர்கள்” என்றே அழைக்க வேண்டும் என்று சொல்லி அது தற்போது அரசாணையாக இன்னும் ஓரிரு நாட்களில் வெளியிடப்பட இருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவமனைக்கு வருபவர்களை “மருத்துவப் பயனாளர்கள்” என்றே அழைக்க வேண்டும் என்கின்ற சுற்றறிக்கையை சம்பந்தப்பட்ட இயக்குநர்கள் மூலம் அனுப்பபட இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.