சென்னை: தமிழ்நாடு முழுவதும் விரைவில் 100 நீர்த்தேக்கங்கள் புனரமைக்க நீர்வளத்துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி பிரதான் மந்திரி கிரிஷி சின்சாய் யோஜனா திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசின் 60 சதவீத நிதி, மாநில அரசின் 40 சதவீதம் நிதியுதவியுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. கடந்த 2023ம் ஆண்டில் நீர்நிலைகளை புனரமைக்க தமிழக அரசு நிதி கோரி இருந்த நிலையில் தற்போது ஒன்றிய அரசு ஒதுக்கியுள்ளதால், நீர்வளத்துறை நிர்வாக மற்றும் நிதி ஒப்புதல்களை வழங்கியுள்ளது. அதன்படி ரூ.111 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் சென்னை மண்டலத்தில் 11 நீர்த்தேக்கங்கள், மதுரை மண்டலத்தில் 89 நீர்த்தேக்கங்கள் என 100 நீர்நிலைகள் புனரமைக்கப்பட உள்ளது. மேலும் இந்த பணிகள் வரும் டிசம்பர் மாத்திற்குள் முழுவதுமாக முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கடந்த 5 ஆண்டுகளில் மழைக்கால வெள்ளப்பெருக்கின் போது அதிகளவில் பாதிக்கப்பட்ட இடங்கள் அடையாளம் காணப்பட்டு முதற்கட்டமாக ரூ.111 கோடியில் 100 நீர்த்தேக்கங்கள் புனரமைப்பு செய்யப்பட உள்ளது. ஒவ்வொரு நீர்த்தேக்கத்திற்கும் சுமார் ரூ.1.5 கோடி ஒதுக்கப்படுகிறது. இது மூலமாக பாசன வாய்க்கால்கள் சீரமைப்பு, கரையோரங்களை பலப்படுத்தல், பறவைகளுக்கான தீவுகள் அமைத்தல் மற்றும் கழிவுநீர் புகுதலை தடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
அதேபோல் இந்த நீர்நிலைகள் புனரமைக்கப்படுவதால் மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்குகள் கட்டுப்படுத்தப்பட்டு நீர்நிலை நிலைத்தன்மை மற்றும் சேமிப்பு அதிகரிக்கப்படும். மேலும் நீர்த்தேக்கங்கள் எல்லை வரையறுக்கும் பணிகளை நீர்வளத்துறை மற்றும் வருவாய் துறை இணைந்து பணியாற்றி வருகிறது. 14 நாட்களுக்குள் ஆக்கிரமிப்பு குடியேற்றங்கள் அனைத்துக்கும் நோட்டீஸ் வழங்கப்படும். பின்னர் ஒன்றிய ஜல் சக்தி அமைச்சகத்திடம் ஆக்கிரமிப்பற்ற பகுதி என சான்றிதழுக்கு விண்ணப்பிக்கப்பட உள்ளது. சென்னை புறநகர் பகுதியான திருவேற்காடு கோலடி ஏரியில் ஆக்கிரமிப்புகள் இன்று அகற்றப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
* சென்னை மண்டலம்: தாம்பரம், தாழம்பூர், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ளிட்ட 11 நீர்த்தேக்கங்கள் புனரமைக்கப்படுகிறது.
* மதுரை மாவட்டத்தின் நகர் மற்றும் புறநகர் பகுதிகள்
* சிவகங்கை மாவட்டத்தின் கல்லல், சாக்கோட்டை, தேவக்கோட்டை உள்ளிட்ட 49 இடங்கள்.
* ராமநாதபுரம் மாவட்டத்தின் ஆர்.எஸ்.மங்களம், நைனார்கோயில், திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட 38 இடங்கள்.
* கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் தியாகதுருகம், கள்ளக்குறிச்சி, திருநாவலூர் உள்ளிட்ட 11 இடங்கள்.
* விருதுநகர் மாவட்டத்தில் ஒரு இடம் உள்ளிட்ட 89 நீர்த்தேக்கங்கள் புனரமைக்கப்படுகிறது.