தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்?: சென்னையில் 40 லட்சம் பேரில் 10 லட்சம் பேரின் வாக்குரிமை பறிபோகும் அபாயம்; தேர்தல் ஆணையம் நடவடிக்கை
சென்னை: எஸ்.ஐ.ஆர் குளறுபடிகள் காரணமாக, தமிழக வாக்காளர் பட்டியலில் இருந்து 85 லட்சம் பேர் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலில் தெரியவந்துள்ளது. இது தமிழகத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாடு, மேற்குவங்கம் உள்பட மொத்தம் 9 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்.ஐ.ஆர் (வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்) பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டு, அந்த பணிகள் நடைபெற்று வருகிறது.
முதல்கட்டமாக பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக நடத்தப்பட்ட எஸ்.ஐ.ஆர் பணிகளில் பல குளறுபடிகள் மற்றும் சர்ச்சைகள் ஏற்பட்டது. இதனையடுத்து நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு ஆதாரங்களை வெளியிட்டார்.
இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்து, அத்துடன் பல்வேறு இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் சார்பாக ஆர்ப்பாட்டங்கள் நடந்தது. இருப்பினும் தமிழகத்தில் உள்ள வாக்காளர்கள் நலன் கருதி திமுக சார்பில் எஸ்.ஐ.ஆர் பணிகளில் மக்களுக்கு உதவும் வகையில் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். அத்துடன் திமுக சார்பில் சட்ட ரீதியாக வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது. அதேவேளையில் அதிமுகவும் பாஜவும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
அரசியல் கட்சிகள் மட்டுமல்லாது, பொது மக்களிடமும் எஸ்.ஐ.ஆர் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் மற்றும் கேள்விகள் எழுந்துள்ளன. பல்வேறு குழப்பங்களுக்கு நடுவில் தமிழகத்தில் கடந்த மாதம் முதல் இந்த பணி தொடங்கியது. டிசம்பர் 4ம் தேதி வரை எஸ்.ஐ.ஆர் பணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. வாக்காளர்கள் படிவத்தை பூர்த்தி செய்வதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, இப்பணிக்கான கால அவகாசம், வரும் 11ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, இந்த பணிகளில், பிஎல்ஓக்களின் பயிற்சியின்மை, ஆன்லைன் பிரச்னை, போதிய தகவல் இல்லாத காரணத்தினால் மக்கள் குழப்பியுள்னர். இதன் மூலம் ஏழை, சிறுபான்மை, பட்டியலின மக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர், அவர்களிடம் பழைய ஆவணங்கள் இல்லாதது, ஆதார் இணைப்பு குறைவாக இருப்பதால் மக்கள் தங்கள் வாக்கை இழக்கும் நிலையில் உள்ளனர்.
வாக்காளர்களும், விண்ணப்பத்தில் கேட்டுள்ளபடி 2002ம் ஆண்டு வாக்கு செலுத்திய விவரங்களை பெற முடியாமல் குழப்பத்தில் மூழ்கியுள்ளனர். பல்வேறு குழப்பத்தில் எஸ்ஐஆர் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இதுவரை தமிழகத்தில் கொடுக்கப்பட்ட படிவத்தில் “சேகரிக்க முடியாத” (uncollectible) படிவங்களின் எண்ணிக்கை 84.91 லட்சமாக உள்ளது என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் வரும் 16ம் தேதி அன்று வெளியிடப்பட இருக்கும் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து கிட்டத்தட்ட 85 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
தற்போதைய வாக்காளர் பட்டியலின்படி தமிழகத்தில் மொத்தம் 6.41 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அதில் 13.24 சதவீதம் பேர் இந்த “சேகரிக்க முடியாத” பிரிவில் வந்துள்ளனர்.
நேற்று முன்தினம் வெளியிட்ட தகவல்படி, 84.91 லட்சத்தில் அதிகபட்சமாக 44.22 லட்சம் பேர் “நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள்” (Permanently Shifted) என்றும், 26.18 லட்சம் பேர் “இறந்தவர்கள்” என்றும் (Deceased), 10.73 லட்சம் பேர் “இல்லாதவர்கள்” (Absent) என்றும், 3.5 லட்சம் பேர் “ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டவர்கள்” (Already Enrolled - Duplicate) என்றும் தற்காலிகமாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மாவட்ட வாரியாக குறைந்தபட்சமாக அரியலூரில் வெறும் 4.3 சதவீதம் (23,000) மட்டுமே சேகரிக்கப்படாமல் உள்ளது. ஆனால் தலைநகர் சென்னையில் அதிர்ச்சி தரும் வகையில் 40.05 லட்சம் வாக்காளர்களில் 31.78 சதவீதம் (12.73 லட்சம்) அதாவது மூன்றில் ஒரு வாக்காளர் படிவம் சேகரிக்கப்படாத நிலை உள்ளது. செங்கல்பட்டில் 20.7 சதவீதம் (5.78 லட்சம்) படிவங்கள் சேகரிக்கப்படாமல் உள்ளன.
தேர்தல் ஆணையம் இதுவரை “விநியோகிக்கப்பட்ட படிவங்கள் 99.45 சதவீதம் (6.38 கோடி), டிஜிட்டல் ஆக்கப்பட்டவை 94.32 சதவீதம் (6.05 கோடி) என்று கூறி வந்தது. ஆனால் உண்மையில் சேகரிக்கப்பட்டு உண்மையாக டிஜிட்டல் ஆக்கப்பட்ட படிவங்கள் 82.57 சதவீதம் (5.29 கோடி) மட்டுமே என்பது தற்போது தெரியவந்துள்ளது. மீதமுள்ள 13.24 சதவீதம் “சேகரிக்க முடியாத” படிவங்களையும் டிஜிட்டல் ஆக்கப்பட்டவை என்று சேர்த்துத்தான் 95.81 சதவீதம் என்று இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலில் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது: 82.57 சதவீதம் படிவங்கள் மட்டுமே உண்மையில் டிஜிட்டல் ஆக்கப்பட்டுள்ளன, இவர்களது பெயர்கள் வரைவு பட்டியலில் இடம்பெறும். மீதமுள்ளவர்களின் பெயர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளது. சென்னையில் “நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள்” எண்ணிக்கை அதிகமாக இருப்பதற்கு நகர விரிவாக்கமும் வேகமான நகரமயமாக்கலுமே காரணமாக உள்ளது.
பணிகள் நடைபெற்று வருவதால், இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்றும், டிசம்பர் 11ம் தேதிக்கு பிறகே இறந்தவர், இடம்பெயர்ந்தவர், இல்லாதவர், நகல் போன்ற காரணங்களுடன் இறுதி பட்டியல் தயாரிக்கப்படும். வரைவு பட்டியலில் யாராவது பெயர் நீக்கப்பட்டாலும், இறுதி பட்டியலுக்கு பிறகு ஜனவரி வரை ஒரு மாதம் ஆட்சேபனை தெரிவித்து, அவர்கள் பெயரை சேர்த்துக் கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தார்கள்.

