Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தமிழ்நாடு முழுவதும் ‘ஓரணியில் தமிழ்நாடு’ பரப்புரையில் ஈடுபட்டுள்ள திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு: தொலைபேசி வாயிலாக நிலவரம் குறித்து கேட்டறிந்தார்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் ‘ஓரணியில் தமிழ்நாடு’ பரப்புரையில் ஈடுபட்டுள்ள திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக பேசினார். உறுப்பினர் சேர்க்கை நிலவரம் குறித்தும் கேட்டறிந்தார். “ஓர­ணி­யில் தமிழ்­நாடு” எனும் மாபெரும் முன்னெடுப்பை திமுக தொடங்கியுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த 1ம் தேதி தொடங்கி வைத்தார்.

அமைப்புரீதியாக செயல்படும் 76 மாவட்ட கழகங்கள் சார்பில் `ஓரணியில் தமிழ்நாடு’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டங்கள் நடந்தது. கடந்த 3ம் தேதி முதல் வீடு, வீடாக சென்று புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணி தொடங்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி தமிழகம் முழுவதும் கடந்த 3ம் தேதி `ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரிலான திமுக உறுப்பினர் சேர்க்கை தொடங்கியது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது இல்லம் அமைந்துள்ள சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள 3வது தெருவில் நடந்து சென்று வீடு, வீடாக உறுப்பினர் சேர்க்கை பணியை அவரே நேரடியாக மேற்கொண்டார். மக்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். தொடர்ந்து அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக முன்னணியினர் அனைவரும் அவரவர் சொந்த வாக்குச்சாவடிகளில் இருக்கும் வீடுகளுக்கு நேரில் சென்று மக்களை சந்தித்து வருகின்றனர்.

திமுக செயல் வீரர்கள் ஒருவர் விடாமல் வீட்டுக்கு வீடு சென்று பரப்புரையை முடுக்கி விட்டுள்ளனர். மக்களை சந்திக்கும் திமுகவினர் திமுக அரசின் சாதனைகளையும், திட்டங்களையும், திமுக நடத்தியுள்ள மாநில உரிமை போராட்டங்களையும் மக்களிடத்தில் எடுத்து சொல்லி வருகின்றனர். ஒவ்வொரு வாக்காளரையும் ‘‘ஓரணியில் தமிழ்நாடு’’ என்று பிரசார இயக்கத்தில் இணைத்து வருகின்றனர். மேலும் மக்களை நேரில் சந்திக்கும் திமுகவினர், திமுக உறுப்பினர் சேர்க்கை படிவத்தையும் வழங்கி வருகின்றனர். அந்த உறுப்பினர் சேர்க்கை படிவத்தில் 6 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது.

அதற்கு மக்கள் பதில் அளித்து வருகின்றனர். இதனை ஒரு மினி தேர்தல் பிரசாரம் போலவே திமுகவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் வீடு, வீடாக சென்று ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டுள்ள திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொலைபேசியில் பேசினார். தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உறுப்பினர் சேர்க்கை விவரங்களை கேட்டறிந்தார். இதே போல பல மாவட்ட செயலாளர்களை தொடர்பு கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாக கூறப்படுகிறது. அப்போது ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.

மக்களை சந்திக்கும் போது இந்த அரசை பற்றி என்ன என்ன கூறுகிறார்கள் என்பது குறித்தும் கேட்டறிந்தார். மேலும் உறுப்பினர் சேர்க்கையை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்று அப்போது வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. ஓரணியில் தமிழ்நாடு பயணம் மொத்தம் 45 நாட்கள் நடக்கிறது. ஆகஸ்ட் 15ம் தேதிக்கு பிறகு, தமிழ்நாடு முழுக்க ஓரணியில் தமிழ்நாடு நிறைவு விழாக்கள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.