Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழ்நாட்டுக்கு வந்தவர்கள் எவருக்கும் குரங்கு அம்மை அறிகுறிகள் இல்லை: பொது சுகாதாரத் துறை இயக்குநர் தகவல்!

சென்னை: வெளிநாடுகளில் இருந்து இதுவரை தமிழ்நாட்டுக்கு வந்தவர்கள் எவருக்கும் குரங்கு அம்மை அறிகுறிகள் இல்லை என பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தகவல் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் குரங்கு அம்மை தொற்று அதிகரித்து வருகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் மட்டுமே சமீபகாலமாக தென்பட்ட இந்தநோய், இப்போது ஐரோப்பிய, ஆசிய நாடுகளிலும் பரவ ஆரம்பித்துள்ளது. இச்சூழலில் தமிழ்நாட்டில் இந்த தொற்று நோயை தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் ஒருபகுதியாக விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் தொற்று குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது: தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய 4 சர்வதேச விமான நிலையங்களிலும் வெளிநாடுகளிலிருந்து வருபவர்களை கண்காணிக்கும் பணி தொடங்கியுள்ளது. அதன்படி, சர்வதேச விமானங்களில் பயணித்து வருபவர்களின் உடல் வெப்பத்தை பரிசோதிக்கும் அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.

இது கொரோனா காலங்களிலிருந்து பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த பரிசோதனைகளில் பயணிகளுக்கு காய்ச்சல் இல்லை எனில் பச்சை நிறத்திலும், காய்ச்சல் இருந்தால் சிவப்பு நிறத்திலும் விளக்கு எரிந்து எச்சரிக்கை ஒலி எழும். முழு நேரமும் பணியில் இருக்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த களப்பணியாளர்கள் நோயாளிகளை அடையாளம் கண்டு விமான நிலையத்திலேயே, அவர்களை தனிமைப்படுத்தும் அறையில் தங்க வைத்து முதலுதவிகளை செய்வார்கள்.

தேவைப்பட்டால் உயர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்படுவார்கள். தமிழ்நாட்டில் இதுவரை ஒருவருக்கு கூட குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்படவில்லை. சொல்லப்போனால், இதுவரை வெளிநாடுகளில் இருந்து வந்த எவருக்கும் அத்தகைய அறிகுறிகள் தென்படவில்லை. இருந்தபோதிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளோம் என்று கூறியுள்ளார்.