Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தமிழகத்தில் 23 சட்டமன்ற தொகுதிகளில் முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கம்: கட்டுமான பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்

சென்னை: தமிழகத்தில் 23 சட்டமன்ற தொகுதிகளில் கட்டப்பட உள்ள முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கத்துக்கான கட்டுமான பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் பல்வேறு விளையாட்டு வசதிகளுடன் ஒரு சிறு விளையாட்டரங்கம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு 2022-23ம் ஆண்டிற்கான இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை மானிய கோரிக்கையில், தமிழ்நாட்டில் 10 இடங்களில் தலா ரூ.3 கோடி மதிப்பீட்டில் சிறு விளையாட்டரங்கங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில், முதல்கட்டமாக கொளத்தூர், சேப்பாக்கம், ஸ்ரீவைகுண்டம், காரைக்குடி, சோழவந்தான், வாணியம்பாடி, காங்கேயம், ஆலங்குடி ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளில் ரூ.2.50 கோடி அரசு நிதியும், ரூ.50 லட்சம் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்தும் என மொத்தம் தலா ரூ.3 கோடியில் முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கம் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

மேலும், பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியில் முதலமைச்சர் சிறு விளையட்டரங்கம் அமைக்கும் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 2024-25ம் ஆண்டிற்கான இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கையில், துணை முதல்வரால் 22 சட்டமன்ற தொகுதிகளில் முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கங்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, பணிகள் நடந்து வருவதோடு, விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட

உள்ளது. தற்போது 3வது கட்டமாக 44 சட்டமன்ற தொகுதிகளில் முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கங்கள் அமைத்திட மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் - பர்கூர் மற்றும் தளி சட்டமன்ற தொகுதிகளிலும், தஞ்சாவூர் மாவட்டம் - பேராவூரணி, திருவையாறு மற்றும் ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதிகளிலும், கோவை மாவட்டம் - கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதியிலும், திருச்சி மாவட்டம் - மணப்பாறை சட்டமன்ற தொகுதியிலும், விழுப்புரம் மாவட்டம் - செஞ்சி, திண்டிவனம் மற்றும் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிகளிலும், சென்னை மாவட்டம் - மதுரவாயல், திரு.வி.க. நகர் மற்றும் பெரம்பூர் சட்டமன்ற தொகுதிகளிலும், விருதுநகர் மாவட்டம் - திருச்சுழி மற்றும் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதிகளிலும், காஞ்சிபுரம் மாவட்டம்- ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதியிலும், திருவாரூர் மாவட்டம் - நன்னிலம் மற்றும் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிகளிலும், கரூர் மாவட்டம் - குளித்தலை சட்டமன்ற தொகுதியிலும், செங்கல்பட்டு மாவட்டம் - ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியிலும், கன்னியாகுமரி மாவட்டம் - கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியிலும், சேலம் மாவட்டம் - சங்ககிரி மற்றும் எடப்பாடி சட்டமன்ற தொகுதிகளிலும், என மொத்தம் 23 சட்டமன்றத் தொகுதிகளில் ரூ.69 கோடி மதிப்பீட்டில் முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கங்கள் அமைக்க முதல்வர் நேற்று அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டி.ஆர்.பி.ராஜா, தலைமை செயலாளர் முருகானந்தம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர் பொன்னையா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.