சென்னை: கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: முதல்வரை சந்தித்து, திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தீயணைப்பு வீரர்களுக்கு 14 வீடுகள் கட்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்தேன்.
சிறு குறு நடுத்தர தொழில்களுக்கு மின்சார கட்டணத்தில் குறிப்பாக நிலைக் கட்டணம் மற்றும் பீக் ஹவர் சார்ஜஸ் விஷயங்களில் சலுகைகள் தர வேண்டும். ஒன்றிய அரசினுடைய பல்வேறு கொள்கை முடிவுகள் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம் போன்ற பகுதிகளில் இருக்கிற ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்கள் இன்றைக்கு பாதிப்பில் இருக்கின்றன. பாதிக்கப்பட்டுள்ள சிறு குறு தொழில்களை காப்பாற்ற வேண்டும் என பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பற்றி முதல்வரிடம் பேசினேன். இவ்வாறு அவர் கூறினார்.