சென்னை: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்றும் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவி்த்துள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் தீவிரமாக மழை பெய்தது.
இந்நிலையில் குஜராத்-வடக்கு கேரள கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் அரபிக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலை கொண்டுள்ளது. மேலும், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாகவும் தமிழகத்தில் மழை நீடிக்கும் வாய்ப்புள்ளது. அதன் காரணமாக கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நேற்று கனமழை பெய்துள்ளது.
இதையடுத்து, இன்று முதல் ஆகஸ்ட் 2ம் தேதி வரையில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னையில் இன்று பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை இயல்பை ஒட்டி இருக்கும். நகரின் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் வாய்ப்புள்ளது.