Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பல நூறு கோடி நிதியை ஆயிரமாக குறைத்தது அம்பலம்; தமிழக ரயில்வே திட்டங்களுக்காக ஒதுக்கிய நிதியை பறித்த பாஜ அரசு: பிங்க் புத்தகத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்

மதுரை: ஒன்றிய பாஜ அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில், தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிதியும் பறிக்கப்பட்டுள்ளது பிங்க் புத்தகம் வாயிலாக தெரிய வந்துள்ளது. மதுரை எம்பி வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கை: நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் அறிவிப்பின்போது வெளியான பிங்க் புத்தகத்தில், தெற்கு ரயில்வேயின் புதிய வழித்தடங்களுக்கு ரூ.976 கோடி ஒதுக்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நேற்று வெளியிடப்பட்டுள்ள பிங்க் புத்தகத்தில் அத்தொகை ரூ.301 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. இரட்டைப்பாதை திட்டங்களுக்கு ரூ.2,214 கோடி ஒதுக்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது ரூ.1,928 கோடி தான் ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய வழித்தடங்களான திண்டிவனம் - செஞ்சி - திருவண்ணாமலை வழித்தடத்திற்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது வெறும் ரூ.1,000 மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்திப்பட்டு - புத்தூருக்கு ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது, ரூ.1,000 மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. திண்டிவனம் - நகரிக்கு ஒதுக்கப்பட்டிருந்த ரூ.350 கோடி நிதி, ரூ.153 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. ஈரோடு - பழநிக்கு ஒதுக்கப்பட்டிருந்த ரூ.100 கோடி நிதி, தற்போது ரூ.1,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. சென்னை - மகாபலிபுரம் - கடலூர் கடற்கரை பாதைக்கு ஒதுக்கப்பட்டிருந்த ரூ.25 கோடி நிதி, தற்போது ரூ.1,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மதுரை - அருப்புக்கோட்டை - தூத்துக்குடிக்கு ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டு இருந்தது. தற்போது ரூ.18 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூர்- கூடுவாஞ்சேரி- இருங்காட்டுக்கோட்டை - ஆவடி லைனுக்கு ரூ. 25 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது, ரூ.1,000 மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

மொரப்பூர் - தர்மபுரிக்கு ரூ.115 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது வெறும் ரூ.49 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல இரட்டை பாதை திட்டங்களில் காட்பாடி - விழுப்புரத்துக்கு ரூ.150 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது, ரூ.1,000 மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. சேலம் - கரூர்- திண்டுக்கல் இரட்டை பாதைக்கு ரூ. 150 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது, ரூ.1000 மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. ஈரோடு - கரூர் இரட்டை பாதைக்கு ரூ. 150 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது, ரூ.1,000 மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இடைக்கால பட்ஜெட்டில் வந்த பிங்க் புத்தகத்தில் ரூ.350 கோடி, ரூ.150 கோடி என ஒதுக்கியது வெறும் தேர்தலுக்காக தான்.

பொது பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கான திட்டங்கள் எதையும் அறிவிக்காமல், அப்பட்டமான துரோகத்தை செய்த மோடி அரசு ரயில்வே திட்டங்களிலும் அதே துரோகத்தை அரங்கேற்றியுள்ளது. இடைக்கால பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு அறிவிக்கப்பட்ட நிதியும் பறிக்கப்பட்டுள்ளது. பொது பட்ஜெட்டில் சென்னை மெட்ரோ ரயில் உள்ளிட்ட தமிழ்நாட்டின் புதிய திட்டங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி இப்போது, ரயில்வேயின் புதிய வழித்தடங்கள் அனைத்துக்கும் இழைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.