புதுடெல்லி: பீகார் பேரவை தேர்தல் நடப்பாண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இதையொட்டி பீகாரில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. அதன்படி கடந்த மாதம் 1ம் தேதி வௌியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இந்நிலையில் பீகார் வாக்காளர் தீவிர திருத்த பட்டியல் விவகாரத்தில் இந்திய தேர்தல் ஆணைய நடவடிக்கைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த சூழலில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யா என்பவர் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அதில், “தமிழ்நாடு, புதுச்சேரி, அசாம், கேரளா மற்றும் மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. எனவே பீகார் மாநிலத்தில் நடத்தப்பட்டது போன்று மேற்கண்ட ஐந்து மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதுகுறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.