ஓரணியில் தமிழ்நாடு' என்ற பெயரில் ஆதார் விபரங்கள் எதுவும் வாங்கவில்லை: உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் திமுக முறையீடு
மதுரை: ஓரணியில் தமிழ்நாடு' என்ற பெயரில் ஆதார் விபரங்கள் எதுவும் வாங்கவில்லை. தவறான தகவலை அளித்து வழக்கு தொடரப்பட்டுள்ளது: உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் எம்.பி. வில்சன் முறையீடு செய்துள்ளார். மனுவாகத் தாக்கல் செய்தால் நாளை விசாரணைக்கு எடுப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் திமுகவினர் நடத்தி வரும் ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை முகாமின்போது பொதுமக்களிடம் இருந்து ஓடிபி எண் பெற இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக திருப்புவனத்தை சேர்ந்தவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் திமுக, ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தி வருகிறது. இதற்காக திமுகவினர் அனைத்து வீடுகளுக்கும் சென்று, வீட்டில் இருப்பவர்களிடம் பல்வேறு ஆவணங்களைக் கேட்டு துன்புறுத்துகின்றனர். அனுமதி பெறாமல் வீட்டில் முதல்வர் படத்துடன் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என அச்சிடப்பட்ட சுவரொட்டியை ஓட்டுகின்றனர்.
குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல் மற்றும் பிற அடையாள அட்டைகளைக் கேட்கின்றனர். அந்த ஆவணங்களைத் தர மறுத்த பெண்களிடம், மாதந்தோறும் அரசிடம் பெற்று வரும் ஆயிரம் ரூபாயை நிறுத்திவிடுவதாக மிரட்டியுள்ளனர். பின்னர் தனிப்பட்ட செல்போன் எண்களைப் பெற்று பதிவு செய்தனர். செல்போனுக்கு வந்த ஓடிபியை (ஒன் டைம் பாஸ்வேர்டு) கேட்டுப் பெற்று உறுப்பினர்களாகச் சேர்க்கின்றனர்.
இவ்வாறு அரசியல் காரணங்களுக்காக ஒருவரின் அனுமதியில்லாமல் பொதுமக்களின் தனிப்பட்ட விவரங்களை சேகரிப்பது குற்றச்செயலாகும். எனவே, பொதுமக்களிடமும் இருந்து ஆதார் விவரங்களை திமுகவினர் சேகரிப்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என அறிவிக்கவும், எந்த காரணத்துக்காகவும் ஆதார் விவரங்களைச் சேகரிக்கக் கூடாது என்றும், இதுவரை சேகரித்த ஆதார் மற்றும் தனிப்பட்ட விவரங்களை உடனடியாக அழிக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் திமுகவின் ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை முகாமில் மக்களிடம் ‘ஓடிபி’ பெற இடைக்கால தடை விதித்தது. தடையை தொடர்ந்து திமுக சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மூத்த வழக்கறிஞர் எம்.பி. வில்சன் அளித்த மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில் "ஆதார் எண்ணைப் பயன்படுத்தி OTP பெறுவதாக தவறான தகவலை நீதிமன்றத்தில் கூறி தடை உத்தரவை அதிமுகவினர் பெற்றுள்ளனர். தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்காளர் பட்டியல்படியே உறுப்பினர்களை சேர்க்கிறோம். ஆனால், உறுப்பினர் சேர்க்கை சம்மதம் பெறவே, செல்போன் எண் கேட்டு OTP பெறப்பட்டது. வேறு எந்த ஆவணமும் வாங்கவில்லை என திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் எம்.பி. வில்சன் முறையீடு செய்துள்ளார்