தமிழ்நாட்டில் 95.39% S.I.R. படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ள நிலையில் 21.99% மட்டுமே பெறப்பட்டுள்ளது: இந்திய தேர்தல் ஆணையம்
சென்னை: எஸ்.ஐ.ஆர். கணக்கீட்டு படிவங்களுடன் எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டிய தேவை இல்லை என தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் (SIR) இரண்டாம் கட்டத்தை தொடங்கியுள்ளது. SIR 2.0' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விரிவான பணி, 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கியது. இந்தப் பணிகள் பிப்ரவரி 7, 2026 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீட்டுடன் நிறைவடையும்.
வழக்கமான வாக்காளர் பட்டியல் புதுப்பித்தல்களைப் போலல்லாமல், 'SIR 2.0' என்பது இந்தியாவில் உள்ள மிகப்பெரிய வாக்காளர் தரவுத்தளத்தில் இருந்து பிழைகளை நீக்குவதற்கும், நகல்களை அகற்றுவதற்கும் வடிவமைக்கப்பட்ட ஒரு கள அளவிலான நடவடிக்கையாகும். தகுதிவாய்ந்த வாக்காளர்கள் மட்டுமே பட்டியலில் இருப்பதை உறுதிசெய்ய, வீடு வீடாகச் சென்று சரிபார்ப்பு நடத்தப்படும். இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள் அல்லது நகல் உள்ளீடுகள் நீக்கப்படும். அதிகாரிகள் தரும் ஆவணங்களை நீங்கள் நிரப்பி கொடுத்தால் மட்டுமே உங்கள் வாக்காளர் லிஸ்ட் உறுதி செய்யப்படும்.
அந்தமான் நிக்கோபார் தீவுகள், சத்தீஸ்கர், கோவா, குஜராத், கேரளா, லட்சத்தீவு, மத்தியப் பிரதேசம், புதுச்சேரி, ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த பணி நடைபெறும்.
அதன்படி அந்தமான் நிக்கோபார் தீவுகள் 99.98 சதவிதம் படிவங்கள் விநியோகிக்கப்பட்டு 24.87 சதவீதம் பெறப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் - 20.60 % கோவா 54.08 %, குஜராத் 27.03%, கேரளா 3.39%, லட்சத்தீவு 46.06%, மத்தியப் பிரதேசம் 30.35%, புதுச்சேரி 32.74%, ராஜஸ்தான் 47.52%, தமிழ்நாடு 21.99% , உத்தரப் பிரதேசம் 6.14%, மேற்கு வங்கம் 20.59% படிவங்கள் பெறப்பட்டுள்ளது
தமிழ்நாட்டில் 95.39% S.I.R. படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ள நிலையில் 21.99% மட்டுமே பெறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 6.11 கோடி S.I.R. படிவங்கள் விநியோகிக்கப்பட்டு 1.41 கோடி படிவங்கள் பெறப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டது. புதுச்சேரியில் 9.68 லட்சம் S.I.R. படிவங்கள் விநியோகிக்கப்பட்டு 3.34 லட்சம் படிவங்கள் பெறப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
எஸ்.ஐ.ஆர். படிவங்களில் வாக்காளர்கள் தங்களது சரியான விவரங்களை நிரப்ப வேண்டும் என தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் உதவியுடன் எஸ்.ஐ.ஆர். படிவங்களை நிரப்பி சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. எஸ்.ஐ.ஆர். படிவத்துடன் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என பி.எல்.ஓ.க்கள் திருப்பி அனுப்பியதாக புகார் தெரிவித்துள்ளனர். ஆவணங்கள் கேட்டு வாக்காளர்களை திருப்பி அனுப்பியதாக தகவல் வெளியான நிலையில் விளக்கம் அளித்துள்ளது.


