சென்னை: அமித்ஷா எப்போது வேண்டுமானாலும் தமிழகம் வருவார். தேசிய ஜனநாயக கூட்டணியில் நிறைய கட்சிகள் சேரும் என்று பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.அம்பேத்கர் நினைவு நாளையொட்டி தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் பாரிமுனையில் இருந்து தொண்டர்களுடன் பேரணியாக நடந்து சென்று, ராஜாஜி சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது மாநில துணை தலைவர்கள் கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி உடனிருந்தனர்.
தொடர்ந்து, நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டி: அயோத்தி இந்தியாவில் தானே இருக்கிறது. அயோத்தி இங்கிலாந்து, ஐரோப்பாவில் இல்லையே. அதனால், அயோத்தி போல தமிழகம் மாறுவதில் எந்த தவறும் இல்லை. நம் அனைவருக்கும் ராமரின் ஆட்சியை பற்றி தெரியும். எனவே, தேசிய ஜனநாயக கூட்டணி, ராமரின் ஆட்சியை தரும். திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வேண்டும். தர்கா சம்பந்தப்பட்டவர்களோ, இஸ்லாமியர்களோ யாரும் ஒருவர் கூட இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
எத்தனை யுகங்கள் ஆனாலும் சரி, சனாதன தர்மத்தை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. அமித்ஷா எப்போது வேண்டுமானாலும் தமிழகம் வருவார். கூட்டணியில் நிறைய கட்சிகள் சேரும். நிச்சயம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.


