சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் அக்.14 முதல் நடைபெறும் என சபாநாயகர் அப்பவு அறிவித்துள்ளார். அக்டோபர் 14ம் தேதிக்கு முன்பு அலுவல் ஆய்வுக்குழு கூட்டப்பட்டு சட்டப்பேரவை கூட்டம் எத்தனை நாள் நடைபெறும் என்று அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்தார். சட்டப்பேரவையின் கடைசி கூட்டத்தொடர் கடந்த ஏப்ரல் 29 உடன் நிறைவடைந்தது
இது தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் அப்பாவு செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:
தமிழ்நாடு சட்டபேரவை விதி 26-1-ன் கீழ் தமிழ்நாடு சட்டபேரவைக் கூட்டத்தொடர் வரும் அக்டோபர் மாதம் 14-ம் தேதி காலை 9.30 மணிக்கு தலைமைச்செயலக வளாகத்தில் உள்ள பேரவை மண்டபத்தில் கூடஉள்ளது. அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு சபை கூடியதும் சபை ஒத்திவைக்கப்பட்ட நாள் முதல் இதுவரை முன்னால் சட்டமன்ற உறுப்பினர்கள் 8 பேர் மறைவுற்ற நிகழ்வு குறித்த குறிப்புகள் சட்டமன்றத்தில் தெரிவிக்கப்படும். தொடர்ந்து வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் டி.கே. அமுல்கந்தசாமி மறைவுக்கும், சில முக்கிய பிரமுகர்கள் மறைவுக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும்.
இதனை தொடர்ந்து 2025-26-ம் ஆண்டிற்கான கூடுதல் செலவு மானியகோரிக்கைகள் சட்டமன்றத்தில் அளிக்கப்பட்டு நிறைவேற்றப்படும். அக்டோபர் மாதம் 14-ம் தேதிக்கு முன்னல் ஒரு தேதி குறிப்பிட்டு அந்த தேதியில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்று எத்தனை நாட்கள் சட்டமன்றம் நடைபெறும் என்பது தொடர்பாக முடிவு செய்யபடும் என கூறினார்.