Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருவாச்சி பறவைகள் பாதுகாப்பு சிறப்பு மையம்: ரூ.1 கோடியில் தமிழ்நாடு அமைக்கிறது

சென்னை: தமிழ்நாடு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருவாச்சி பறவைகள் பாதுகாப்புக்கான சிறப்பு மையத்தை நிறுவுவதற்கு தமிழ்நாடு அரசு நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் இருவாச்சி பறவைகள் பாதுகாப்பில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. இருவாச்சி பறவைகள் வெப்பமண்டல காடுகளில் விதைகளை பரப்பி, மரங்களில் மீளுருவாக்கத்திற்கு ஒரு முக்கியமான பங்கை வகிக்கிறது. இருப்பினும், வாழ்விடச் சீரழிவு, காடழிப்பு மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக இந்த பறவை இனங்கள் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன. இப்பறவைகளின் பாதுகாப்பிற்கான அவசரத்தை உணர்ந்து, அறிவியல் ஆராய்ச்சி, வாழ்விட மறுசீரமைப்பு, சமூக ஈடுபாடு மற்றும் தேசிய மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு மூலம் இந்த சவால்களை எதிர்கொள்ள தமிழ் நாடு ஒரு பிரத்யேக மையத்தை நிறுவுகிறது.

அதன்படி, ஆனைமலை புலிகள் சரணாலயம், கோயம்புத்தூர் மாவட்டம் அதன் சுற்றுச்சூழல் வளம் மற்றும் தற்போதுள்ள பாதுகாப்பு உள்கட்டமைப்புக்காக தேர்ந்தெடுக்கப்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெரிய இருவாச்சி, மலபார் சாம்பல் இருவாச்சி, மலபார் கருப்பு வெள்ளை இருவாச்சி மற்றும் இந்திய சாம்பல் இருவாச்சி ஆகிய 4 இனங்கள் காணப்படுகிறது. இந்த மையத்தை நிறுவுவதற்காக அழிந்து வரும் உயிரின பாதுகாப்பு நிதியத்தின் கீழ் மொத்தம் ரூ.1 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி தமிழ்நாட்டின் துணிச்சலான பாதுகாப்பு பயணத்தில் மற்றொரு மைல்கல் ஆகும். இந்தியாவின் முதல் கடற்பசு பாதுகாப்பு சரணாலயம், நீலகிரி வரையாடு திட்டம், தேவாங்கு பாதுகாப்பு மையம் மற்றும் மதுக்கரையில் செயற்கை நுண்ணறிவு மூலம் யானைகள் பாதுகாப்பு திட்டம் ஆகியவற்றை நிறுவியதை தொடர்ந்து இருவாச்சி பறவைகளின் பாதுகாப்பபிற்கான சிறப்பு மையம் உருவாக்கப்பட்டதன் மூலம், இருவாச்சி பறவைகள் பாதுகாப்பை நிறுவனமயமாக்கிய முதல் மாநிலமாக தமிழ்நாடு மாறியுள்ளது.

அழிந்து வரும் பல உயிரினங்களை பாதுகாக்கும் பாரம்பரியத்தை கொண்ட ஆனைமலை புலிகள் காப்பகம், இப்போது இருவாச்சி சூழலியல் மற்றும் பாதுகாப்பு தலைமைத்துவத்திற்கான மையமாக செயல்படும். இந்த மையம் பல்லுயிர் பாதுகாப்பிற்கான எதிர்கால தலைமுறை பாதுகாவலர்களை ஊக்குவிக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.